பொன்னேரி அனுப்பம்பட்டில் புதிய சரக்கு ரயில் முனையம் ரூ.70 கோடி முதலீட்டில் துவக்கம்
பொன்னேரி அனுப்பம்பட்டில் புதிய சரக்கு ரயில் முனையம் ரூ.70 கோடி முதலீட்டில் துவக்கம்
ADDED : டிச 05, 2025 01:50 AM

சென்னை : பொன்னேரியில் 70 கோடி ரூபாய் முதலீட்டில், புதிய சரக்கு ரயில் முனையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 'கதி சக்தி' திட்டத்தின் கீழ், தனியார் பங்களிப்போடு புதிய திட்டங்களை ரயில்வே செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில், முதல் சரக்கு ரயில் முனையம் பயன்பாட்டில் உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, பொன்னேரிக்கு அருகில் உள்ள அனுப்பம்பட்டு கிராமத்தில், இரண்டாவது புதிய சரக்கு ரயில் முனையம் 70 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு, நேற்று முன்தினம் பயன்பாட்டுக்கு வந்தது.
இந்த முனையத்தை, 'சிகல் மல்டிமாடல்' மற்றும் 'ரயில் டிரான்ஸ்போர்ட் லிமிடெட்' நிறுவனம் ஆகியவை உருவாக்கி உள்ளன.
இந்த முனையத்தில் இருந்து, தென்கிழக்கு ரயில்வேயின் கிரீன் பீல்டு சரக்கு முனையத்துக்கு 45 பெட்டிகள் கொண்ட முதல் சரக்கு ரயில் சேவையை தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளர் விபின் குமார் துவக்கி வைத்தார்.
1,389 கி.மீ., துாரம் செல்லும் இந்த ரயில் வாயிலாக, தெற்கு ரயில்வேக்கு 14.80 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும்.
இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில், ''இந்த புதிய சரக்கு ரயில் முனையத்தில், மாதம் ஒன்றுக்கு 21 சரக்கு ரயில்களை கையாளும் வகையில், அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
கன்டெய்னர்கள், உணவு தானியங்கள், சிமென்ட், இரும்பு உட்பட பல்வேறு வகையான சரக்குகளை கையாளும் வசதிகள் உள்ளன'' என்றனர்.

