புதிய எரிபொருள் கட்டுப்பாடு: குழப்பத்தில் வாகன துறை வல்லுநர்கள்
புதிய எரிபொருள் கட்டுப்பாடு: குழப்பத்தில் வாகன துறை வல்லுநர்கள்
ADDED : செப் 28, 2025 01:45 AM

புதுடில்லி:வரும் 2027 - 28 முதல் 2031 - 32 வரையிலான நிதியாண்டுகளுக்கு, கபே -3 எனப்படும் எரிபொருள் கட்டுப்பாடு விதிகளின் வரையறையை ஆற்றல் திறன் பணியகம் வெளியிட்டுள்ளது. இம்முறை கபே விதிமுறைகளில், குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், சில குழப்பங்கள் இருப்பதாக வாகனத் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
முக்கிய மாற்றங்கள் 1 காரின் கார்பன் வெளியேற்றத்திற்கு பதிலாக, காரின் மைலேஜை பொறுத்தே எரிபொருள் கட்டுப்பாடு விதி கணக்கிடப்படும்.
2 எரிபொருள் கட்டுப்பாடு இலக்குகள் ஆண்டு வாரியாக மாற்றப்படும்.
3 நிறுவனத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டை கணக்கிட, மூன்று நிறுவனங்கள் ஓரணியாக இணைந்து கொள்ளலாம். ஆனால், அந்த அணியின் சராசரி எரிபொருள் கட்டுப்பாடு ஆண்டு இலக்கை அடைய வேண்டும்.
4 முதல் முறையாக சிறிய கார்கள் தனிப்பிரிவுக்கு மாற்றப்படும்.
இத்தகைய எரிபொருள் கட்டுப்பாடு விதிகள், குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், உலக நடைமுறைக்கு எதிராக இருப்பதாகவும் வாகனத் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். அதேபோல், பெரிய கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், சிறிய கார் நிறுவனங்களுக்கு எதிராக இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
காரின் மைலேஜை கணக்கிடும் உலகளாவிய முறையான டபுள்யூ.எல்.டி.பி., என்ற இலகு வாகன சோதனை திட்டத்திற்கு இந்தியா மாறுவதால், கார்களின் நிஜ உலக மைலேஜை எளிதாக கண்டறியலாம்.
அதனால், சிறிய கார்களில், விலை உயர்ந்த மாற்றங்களை தடுக்க முடியும் என வாகன நிபுணர்கள் கணிக்கின்றனர்.