சிறுதொழிலுக்கு புதிய கடன் உத்தரவாத திட்டம் நிறுவனங்கள் அடமானமின்றி கடன் பெறலாம்
சிறுதொழிலுக்கு புதிய கடன் உத்தரவாத திட்டம் நிறுவனங்கள் அடமானமின்றி கடன் பெறலாம்
ADDED : ஜன 31, 2025 12:00 AM

புதுடில்லி:சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, எம்.சி.ஜி.எஸ்., என்ற புதிய கடன் உத்தரவாத திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
தேசிய கடன் உத்தரவாத நிறுவனத்தால், இந்த திட்டத்தில் சிறுதொழில் நிறுவனங்களின் கடனுக்கு 60 சதவீதம் வரை உத்தரவாதம் அளிக்கப்படும்.
இதற்காக கடன் வழங்கும் உறுப்பினர் நிறுவனங்களான எம்.எல்.ஐ.,க்கள், தகுதி வாய்ந்த சிறுதொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கு 100 கோடி ரூபாய் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது, 2024 - 25 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அடுத்த நிதியாண்டு பட்ஜெட் தாக்கலுக்கு முன் அமல்படுத்தப்படுகிறது. எம்.சி.ஜி.எஸ்., - எம்.எஸ்.எம்.இ., திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட அனைத்து கடன்களுக்கும் இந்த உத்தரவாத திட்டம் பொருந்தும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
தொழிலுக்கான கருவிகள், இயந்திரங்கள் வாங்குவதற்கு பெறப்படும் கடனுக்கு, இந்த உத்தரவாத திட்டத்தின் பயன் கிடைக்கும். இதனால், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எந்தவித அடமானமும் இல்லாமல் நிதி நிறுவனங்கள், வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவதற்கு வழி ஏற்படும் என தொழில் துறையினர் தெரிவித்தனர்.
சிறுதொழில் துறையில் முதலீட்டை கவரவும், உற்பத்தியை ஊக்குவிக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் இந்த கடன் உத்தரவாத திட்டம் உதவும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.