சிறுதொழில்களுக்கு பாக்கி நிறுவனங்களுக்கு புது உத்தரவு
சிறுதொழில்களுக்கு பாக்கி நிறுவனங்களுக்கு புது உத்தரவு
ADDED : மார் 27, 2025 12:07 AM

புதுடில்லி:சிறு, குறு நிறுவனங்களிடம் பொருட்கள் அல்லது சேவையை பெற்று, 45 நாட்களுக்கு மேலாக தொகையை நிலுவை வைத்துள்ள நிறுவனங்கள், கட்டாயம் அரையாண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சிறு, குறு நிறுவனங்கள், நிலுவை தொடர்பாக, மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., சமாதான் தளத்தில், இதுவரை 97,000க்கும் அதிகமான விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளன.
இந்நிறுவனங்களுக்கு மொத்தம் 21,600 கோடி ரூபாய்க்கு கூடுதலான தொகை வர வேண்டியுள்ளது. நிலுவைத் தொகை திருப்பிச் செலுத்தாத பட்டியலில், மத்திய, மாநில அரசுகளின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களும் அடங்கும்.
இந்நிலையில், சிறு, குறு நிறுவனங்களிடமிருந்து சரக்கு மற்றும் சேவைகளை பெறும் நிறுவனங்கள், 45 நாட்களுக்கு மேலாக அதற்கான கட்டணத்தை செலுத்தாதபட்சத்தில், மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகத்திடம், அரையாண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
நிலுவைத் தொகை எவ்வளவு மற்றும் காலதாமதத்துக்கான காரணங்களை இதில் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.