ADDED : நவ 06, 2024 01:20 AM

புதுடில்லி:காலக்கெடு தவறி, தாமதமாக செலுத்தப்படும் வருமான வரி மீது வசூலிக்கப்படும் வட்டியை ரத்து செய்யவோ; குறைக்கவோ செய்யும் வகையில், உயரதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி, புதிய விதிமுறைகளை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கை வருமாறு:
வருமான வரிச் சட்டம் 220(2ஏ)ன் படி, தாமதமாக செலுத்தும் வரி மீது, மாதத்துக்கு ஒரு சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது. எனினும், சில குறிப்பிட்ட விதிகளை நிறைவு செய்யும் வரி செலுத்துவோருக்கு, வருமான வரி உயரதிகாரிகள், வட்டியை ரத்து செய்யவோ, குறைக்கவோ முடியும்.
ஒன்றரை கோடி ரூபாய்க்கு அதிகமான வட்டியை ரத்து செய்யவோ, குறைக்கவோ முதன்மை தலைமை ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. 50 லட்சம் ரூபாய் முதல் ஒன்றரை கோடி ரூபாய் வரை, தலைமை ஆணையர் முடிவெடுக்கலாம். 50 லட்சத்துக்கு கீழ் உள்ள வட்டியை ரத்து செய்வது அல்லது குறைப்பது குறித்து முதன்மை ஆணையர் முடிவெடுக்கலாம்.
வட்டி ரத்து அல்லது குறைப்புக்கு தகுதி பெற, வரி செலுத்துவோருக்கு அது பாதிப்பு அல்லது சிரமம் ஏற்படுத்துவதற்கான உண்மையான காரணம் கூறப்பட வேண்டும். வரி செலுத்துபவரின் கையை மீறி, சூழ்நிலைகள் காரணமாக தாமதம் ஏற்பட்டிருப்பதை நிரூபிக்க வேண்டும்.
வரி மதிப்பீடு மற்றும் அதுதொடர்பான நடைமுறைகளில் வரி செலுத்துபவர் முழு ஒத்துழைப்பு வழங்கி வந்திருந்தாலும், வட்டிக் குறைப்பு அல்லது ரத்து தொடர்பாக பரிசீலிக்கலாம்.