ADDED : ஜூன் 29, 2025 08:57 PM

புதிய பங்கு வெளியிட 'புட்லிங்க்' விண்ணப்பம்
மும்பையை தலைமையிடமாக கொண்டு, ஆடம்பர உணவு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள புட்லிங்க் எப் அண்டு பி., ஹோல்டிங், புதிய பங்கு வெளியீடு வாயிலாக முதலீட்டை திரட்ட அனுமதி கோரி 'செபி'யிடம் விண்ணப்பித்துள்ளது.
முதலீட்டாளர்கள் வசமுள்ள 1.19 கோடி பங்குகளுடன், புதிய பங்கு விற்பனை வாயிலாக 160 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளது. ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டப்படும் தொகையை, புதிய இரண்டு ஒருங்கிணைந்த கிச்சன், 4 ஹோட்டல்கள் அமைக்கவும், கடன்களை திருப்பி செலுத்தவும் பயன்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
கிரிஜாக் பங்கு விலை ரூ.233 - 245 ஆக நிர்ணயம்
பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயிலச் செல்லும் இந்திய மாணவர்களை அனுப்பும் முகவர்கள் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இணைக்கும் வகையில், தொழில்நுட்ப தீர்வுகளை கிரிஜாக் நிறுவனம் அளித்து வருகிறது.
கொல்கட்டாவை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீடு வாயிலாக, 860 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட உள்ளது. ஒரு பங்கின் விலையை 233 -- 245 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. வரும் ஜூலை 2 முதல் 4ம் தேதி வரை, முதலீட்டாளர்கள் பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம்.
ரூ.3,000 கோடிக்கு ஐ.பி.ஓ.,ஜுனிபர் கிரீன் எனர்ஜி
இந்தியாவின் முன்னணி 10 புதுப்பிக்கத்தக்க மின்சார தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, குருகிராமைச் சேர்ந்த ஜுனிபர் கிரீன் எனர்ஜி, 3,000 கோடி ரூபாய் முதலீடு திரட்ட புதிய பங்கு வெளியீடுக்கு வருகிறது.
இந்நிறுவனம், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டங்களை நிறுவி, அதன் வாயிலாக கிடைக்கும் மின்சாரத்தை, மத்திய, மாநில அரசு நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருமானம் ஈட்டி வருகிறது. ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டும் முதலீட்டை, தன் துணை நிறுவனங்களின் கடனை திருப்பி செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
ரூ.5,000 கோடி திரட்ட வருகிறது கிரெடில்லா
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக்கடன் சேவைகளை வழங்கி வரும் கிரெடில்லா பைனான்சியல் சர்வீசஸ், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 5,000 கோடி முதலீட்டை திரட்ட விண்ணப்பித்துள்ளது.
இதில், முதலீட்டாளர் வசமுள்ள பங்குகள் விற்பனை வாயிலாக 2,000 கோடி ரூபாயும்; புதிய பங்குகள் விற்பனை வாயிலாக 3,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
ரூ.4,250 கோடி திரட்டஐ.பி.ஓ., வரும் மீஷோ
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான மீஷோ, புதிய பங்கு வெளியீடு வாயிலாக 4,250 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட வருகிறது. கடந்த வாரம் அமெரிக்காவில் இருந்து அதிகாரப்பூர்வமாக பெங்களூருக்கு தலைமையிடத்தை மாற்றிய நிலையில், செபியிடம் ரகசிய முறையில் விண்ணப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புதிய பங்குகள் வெளியீடு வாயிலாக முதலீட்டை திரட்டுவதற்கு, தற்போது மீஷோ நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
வேக்பிட் இன்னோவேஷன்ஸ்ஐ.பி.ஓ., விண்ணப்பம்
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு, மரச்சாமான்கள், மெத்தை மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்கள் தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டு வரும் வேக்பிட் இன்னோவேஷன்ஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீடுக்கு அனுமதி கேட்டு செபியிடம் விண்ணப்பித்து உள்ளது.
ஏற்கனவே முதலீட்டாளர் வசமுள்ள 5.84 கோடி பங்குகளுடன், புதிய பங்கு விற்பனை வாயிலாக 468.20 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளது.