ADDED : ஜூலை 25, 2025 12:50 AM

ரூ.4,000 கோடி திரட்ட ஐ.பி.ஓ., வருகிறது என்.எஸ்.டி.எல்.,
மின்னணு பங்கு ஆவண காப்பக நிறுவனமான என்.எஸ்.டி.எல்., புதிய பங்கு வெளியீடு வாயிலாக 4,000 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட உள்ளது. தேசிய பங்குச்சந்தை, எஸ்.பி.ஐ., எச்.டி.எப்.சி வங்கி உள்ளிட்ட நிறுவன முதலீட்டாளர்கள் வசமுள்ள 5.01 கோடி பங்குகள் விற்பனைக்கு வருகின்றன. வரும் 30 முதல் ஆக.,1 வரை முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த 2017ல் என்.எஸ்.இ.,யில் சி.டி.எஸ்.எல்., பட்டியலானதற்கு பிறகு, சந்தைக்கு வரும் இரண்டாவது டெபாசிட்டரி அமைப்பு என்.எஸ்.டி.எல்., ஆகும்.
ரூ.2,600 கோடி திரட்ட வரும் தி எக்ஸிகியூட்டிவ் சென்டர்
பன்னாட்டு நிறுவனங்களுக்கான வாடகை அலுவலக சேவைகளை வழங்கி வரும் தி எக்ஸிகியூட்டிவ் சென்டர் இந்தியா, 2,600 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியீடுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து உள்ளது. இந்நிறுவனம், இந்தியா மட்டுமின்றி; சிங்கப்பூர், யு.ஏ.இ., உள்பட 7 நாடுகளில் உள்ள 14 நகரங்களில், 89 மையங்களை இயக்கி வருகிறது. ஐ.பி.ஓ.,வாயிலாக திரட்டப்படும் தொகையில் 2,410 கோடி ரூபாயை, நிறுவனத்தின் மறுசீரமைப்புக்கும், மீதித்தொகையை நிறுவனத்தின் பிற செலவுகளுக்கும் பயன்படுத்த உள்ளதாக தெரிவித்து உள்ளது.
ஆதித்ய இன்போடெக் பங்கு விலை ரூ.640 - 675
சி.சி.டி.வி.,மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஆதித்ய இன்போடெக், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 1,300 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட உள்ளது.
இதில், முதலீட்டாளர் வசமுள்ள பங்குகள் விற்பனை வாயிலாக 800 கோடி ரூபாயும், புதிய பங்கு விற்பனை வாயிலாக 500 கோடி ரூபாயும் திரட்ட திட்டமிட்டு உள்ளது. வரும் 29ம் தேதி ஐ.பி.ஓ., வரும் நிலையில், பங்கு ஒன்றின் விலை 640 -- 675 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஸ்ரீ லோட்டஸ் டெவலப்பர்ஸ் பங்கு விலை ரூ.140 - 150
மும்பையை தலைமையிடமாக கொண்டு, ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஸ்ரீ லோட்டஸ் டெவலப்பர்ஸ், 792 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட உள்ளது. முற்றிலும் புதிய பங்குகள் விற்பனை வாயிலாக திரட்டப்பட உள்ள தொகையை, தன் துணை நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளது.
இதற்காக, பங்கு ஒன்றின் விலை 140 --150 ரூபாயாக நிர்ணயித்து உள்ளது. வரும் 30ம் தேதி முதல் வரும் ஆக.,1 வரை, முதலீட்டாளர்கள் பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம்.