துறைமுகம், கப்பல்கள் பாதுகாப்பு விரைவில் வருகிறது புது அமைப்பு
துறைமுகம், கப்பல்கள் பாதுகாப்பு விரைவில் வருகிறது புது அமைப்பு
ADDED : டிச 20, 2025 01:24 AM

புதுடில்லி: துறைமுகங்கள், கப்பல்கள் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, துறைமுக பாதுகாப்பு அமைப்பு ஒன்றை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான அமைச்சகங்களின் உயர்நிலை குழு கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று கூட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வணிகக் கப்பல்கள் சட்டம், 2025ன் பிரிவு 13ன் கீழ், இப்புதிய பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் கீழ் இது இயங்கும்.
இக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, துறைமுகங்கள், கப்பல்களில், வலுவான, எதிர்காலத்துக்கு ஏற்ற பாதுகாப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
துறைமுகங்கள், கப்பல்களின் பாதுகாப்பு அமைப்பு, அச்சுறுத்தல் குறித்த தகவல்களை திரட்டுதல், சி.ஐ.எஸ்.எப்., போன்ற பாதுகாப்பு படைகளுக்கு பரிமாறுதல், இணைய பாதுகாப்பை மையமாக கொண்டு செயல்படுதல் ஆகியவற்றில் இந்த அமைப்பு ஈடுபடும்.
துறைமுகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர், தனியார் பாதுகாப்பு முகமைகளுக்கு பயிற்சி வழங்குகின்றனர். அவ்வாறு பயிற்சி சான்று பெற்ற முகமைகள் மட்டுமே துறைமுகம் சார்ந்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட முடியும்.

