காப்புரிமை பெற விண்ணப்பம் முதலிடம் வகிக்கும் தமிழகம்
காப்புரிமை பெற விண்ணப்பம் முதலிடம் வகிக்கும் தமிழகம்
ADDED : டிச 19, 2025 01:18 AM

சென்னை புத்தாக்க தயாரிப்புகளுக்கான காப்புரிமை பெற, இந்திய அறிவுசார் சொத்துரிமை அமைப்பிடம், 2024 - 25ல் விண்ணப்பம் செய்ததில், 15,347 பதிவுகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
காப்புரிமை என்பது, ஒரு புத்தாக்கத்துக்கு அதை உருவாக்கியவர் அந்த தயாரிப்பை பயன்படுத்த, தயாரிக்க, விற்க அரசால் வழங்கப்படும் சட்ட உரிமை. இது, புத்தாக்க தயாரிப்பாளரின் உழைப்பை பாதுகாக்க உதவுகிறது.
எனவே, தனிநபர், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை தங்களின் தயாரிப்புக்கு காப்புரிமை பெற உரிய ஆவணங்களுடன், இந்திய அறிவுசார் சொத்துரிமை அமைப்பிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
ஒரு விண்ணப்பம் பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்யப்பட்டு, காப்புரிமை வழங்கப்படுகிறது. எனவே, சில பிரிவுகளில் காப்புரிமைக்கு விண்ணப்பம் செய்யப்பட்டதில் இருந்து, காப்புரிமை கிடைக்க ஓராண்டுக்கு மேலாகிறது.
தமிழகத்தில், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ளன. அவை, புத்தாக்கத்துக்கான ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி உட்பட பல்வேறு உதவிகளை செய்கின்றன.
இந்நிலையில், காப்புரிமை பெற விண்ணப்பம் செய்வது, தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 2024 - 25ல் காப்புரிமை பெற விண்ணப்பம் செய்ததில், தமிழகம், 15,347 விண்ணப்ப பதிவுடன் முதலிடத்தில் உள்ளது.
இதைதொடர்ந்து, கர்நாடகா, 8,319; மஹாராஷ்டிரா, 7,806; உ.பி., 5,695; தெலுங்கானா, 4,288 என, காப்புரிமைக்கு விண்ணப்பம் செய்துள்ளன.

