ADDED : நவ 05, 2025 12:42 AM

திருப்பூர்: புதிய ஜவுளி கொள்கை தயாரிக்கும் நோக்குடன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை சார்பில், மண்டலம் வாரியாக தொழில்துறையினர் பயிலரங்கு நடந்து வருகிறது.
மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சகம், அடுத்த நிதியாண்டில் புதிய ஜவுளி கொள்கை தயாரிக்க ஆயத்தமாகி வருகிறது.
இதற்காக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை சார்பில், நாடு முழுவதும் ஜவுளி சார்ந்த தொழில்துறையினர் சந்திப்பு நடந்து வருகிறது.
குறிப்பாக, குறு, சிறு தொழில்களில் எப்படியெல்லாம் செலவினங்களை குறைக்கலாம் என்பது குறித்தும், உற்பத்தி செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலமாக போட்டித்திறன் மேம்படுத்துவது குறித்தும், கருத்துக்கேட்புடன் கூடிய பயிலரங்கு நடந்து வருகிறது.
பின்னலாடை தொழில், ஆயத்த ஆடை உற்பத்தி, டெக்ஸ்டைல் குழுமங்கள் வாரியாகவும், மண்டலம் வாரியாகவும் பயிலரங்கு நடந்து வருகிறது. மத்திய அரசின், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்துறை இயக்குநர் வினம்ரா மிஸ்ரா தலைமையிலான குழுவினர், ஒவ்வொரு 'கிளஸ்டர்' வாரியாக கருத்து கேட்டு வருகின்றனர்.
இதுகுறித்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அதிகாரிகள் கூறுகையில், 'நாடு முழுவதும் உள்ள, ஜவுளித்துறை கிளஸ்டர்களில், துறை சார்பில், பயிலரங்கு நடந்து வருகிறது.
குறு, சிறு தொழில்துறையினர் சந்திக்கும் சவால்கள், உற்பத்தி செலவுகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள், போட்டித்திறன் மேம்பாடு குறித்து கருத்து கேட்பும் நடந்து வருகிறது.
அதனை அடிப்படையாக கொண்டு, வரும் நிதியாண்டில், புதிய ஜவுளிக்கொள்கை தயாரிக்க மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது,' என்றனர்.

