'எரிபொருட்களுக்கு கலால் வரியை குறைக்க வேண்டிய அவசியமில்லை'
'எரிபொருட்களுக்கு கலால் வரியை குறைக்க வேண்டிய அவசியமில்லை'
ADDED : பிப் 06, 2024 10:40 AM

புதுடில்லி: உலகளாவிய கச்சா எண்ணெய் விலையை கருத்தில் கொண்டு, எரிபொருட்கள் மீதான கலால் வரியை குறைக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்படவில்லை என, மத்திய வருவாய் துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துஉள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி, கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது குறைந்துள்ளது. ஆகையால், எரிபொருட்கள் மீதான கலால் வரியை குறைப்பதற்கான அவசியம் அரசுக்கு ஏற்படவில்லை.
அரசின் பெட்ரோலிய பொருட்கள் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு குழுவின் தரவுகளின் படி, பிப்ரவரியில், இதுவரை இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் சராசரி விலை பீப்பாய் ஒன்றுக்கு 81.04 அமெரிக்க டாலராகவும், கடந்த ஜனவரியில் 79.22 அமெரிக்க டாலராகவும் இருந்தது.
இதைத் தொடர்ந்து, மார்ச் மாத கச்சா எண்ணெய்க்காக, 'நியுயார்க் மெர்க்கன்டைல் எக்ஸ்சேஞ்ச்' உடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தில், பீப்பாய் ஒன்றுக்கு 72.41 அமெரிக்க டாலராக விலை முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில், தற்போது கலால் வரி குறைந்துள்ளது. 1 லிட்டர் டீசல் மீதான கலால் வரி 15.80 ரூபாயாகவும்; பெட்ரோல் மீதான வரி 19.90 ரூபாயாகவும் உள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த வரிக்குறைப்பு தற்போது உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒரு லிட்டர் டீசல் மீதான கலால் வரி 15.80 ரூபாயாகவும்; பெட்ரோல் மீதான வரி 19.90 ரூபாயாகவும் உள்ளது.