ADDED : அக் 11, 2024 10:39 PM

மும்பை:டாடா குழுமத்தின் அறக்கட்டளை பிரிவான 'டாடா டிரஸ்ட்ஸ்' தலைவராக, நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.
டாடா குழுமத்தின் கவுரவ தலைவராகவும், அதன் அறக்கட்டளைகளின் தலைவராகவும் இருந்த ரத்தன் டாடா, தன் 86வது வயதில், கடந்த 9ம் தேதி காலமானார். இதையடுத்து, நேற்று காலை நடைபெற்ற அறக்கட்டளையின் உறுப்பினர்கள் கூட்டத்தில், டாடா அறக்கட்டளைகளின் தலைவராக நோயல் டாடா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டாடா டிரஸ்டில் ஏற்கனவே உறுப்பினராக உள்ள நோயல் டாடா, மறைந்த ரத்தன் டாடாவின் சித்தி மகனாவார். இதன் வாயிலாக, டாடா டிரஸ்டின் 11வது தலைவராக, நோயல் செயல்பட உள்ளார்.
தோராப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் 'சர் ரத்தன் டாடா டிரஸ்ட்' ஆகியவை டாடா சன்ஸ் நிறுவனத்தில் மொத்தமாக, 66 சதவீத பங்குகளை வைத்துள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய அறக்கட்டளைகளான இவை, பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வருகின்றன. தனக்குப் பின் இவற்றின் தலைவர் யார் என இறப்பதற்கு முன்பே ரத்தன் டாடா அறிவிக்காத நிலையில், அறக்கட்டளை உறுப்பினர்கள் கூடி, புதிய தலைவராக நோயல் டாடாவை தேர்வு செய்தனர்.