வடகிழக்கு மாநில முதலீட்டாளர் மாநாடு 3 நிறுவன முதலீடு ரூ.2.55 லட்சம் கோடி இரண்டு நாள் மாநாட்டை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
வடகிழக்கு மாநில முதலீட்டாளர் மாநாடு 3 நிறுவன முதலீடு ரூ.2.55 லட்சம் கோடி இரண்டு நாள் மாநாட்டை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
ADDED : மே 24, 2025 12:55 AM

புதுடில்லி:வடகிழக்கு மாநில முதலீட்டாளர் மாநாட்டை, நேற்று டில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், இந்தியா மட்டுமல்லாது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், வட கிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை பட்டியலிட்டார். வட கிழக்கு மாநிலங்களில் சுற்றுலா துறையின் முக்கிய பங்கு குறித்து எடுத்துரைத்த பிரதமர், எரிசக்தி, செமிகண்டக்டர் உள்ளிட்ட துறைகளிலும் இம்மாநிலங்கள் முக்கிய மையமாக உருவெடுத்து வருவதாக தெரிவித்தார்.
முக்கிய முதலீடுகள்
அதானி குழுமம்: அடுத்த 10 ஆண்டுகளில் அதானி குழுமம் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அதன் தலைவர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.
பசுமை எரிசக்தி, சாலை கட்டமைப்பு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு உருவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக, அதன் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். 350 பயோகேஸ் ஆலைகள், தகவல் தொடர்பு கட்டமைப்பு விரிவாக்கம், சில்லரை வர்த்தகம் மற்றும் துாய்மை எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்ய உள்ளதாக அவர் கூறினார்.
வேதாந்தா குழுமம்: வடகிழக்கு மாநிலங்களில் 80,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக, வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் மற்றும் எரிவாயு, முக்கிய தாதுக்கள், சுத்திகரிப்பு ஆலைகள், மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் முதலீடு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார்.