ஜி.எஸ்.டி., குறைவாக செலுத்திய ஹோட்டல்களுக்கு 'நோட்டீஸ்'
ஜி.எஸ்.டி., குறைவாக செலுத்திய ஹோட்டல்களுக்கு 'நோட்டீஸ்'
ADDED : செப் 28, 2025 11:09 PM

புதுடில்லி:நாட்டில் உள்ள பல ஹோட்டல்களுக்கு, உணவக சேவைகளுக்கான ஜி.எஸ்.டி.,யை குறைவாக செலுத்தி, வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளனர்.
இந்த நிலுவைத் தொகையின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. 'இது, ஜி.எஸ்.டி., விதிகள் குறித்து இருந்த தெளிவின்மையால் ஏற்பட்டதே தவிர, வரி ஏய்ப்பினால் அல்ல' என ஹோட்டல் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஒரு ஹோட்டல் அறையின் ஒரு நாள் கட்டணம் 7,500 ரூபாய்க்கு மேல் இருந்தால், அந்த ஹோட்டலில் வழங்கப்படும் உணவுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்.
அறை கட்டணம் 7,500 ரூபாய்க்கு குறைவாக இருக்கும் ஹோட்டல்களில், உணவுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படுகிறது.
இது மட்டுமல்லாமல், 'ஸ்பெசிபைடு பிரிமிசஸ்' என்ற பிரிவும் உள்ளது. இதன்படி, நாள் ஒன்றுக்கு 7,500 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கும் ஹோட்டல், உணவகங்களை வெளியே வைத்திருந்தால், உணவுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி., மட்டுமே வசூலிக்கப்படும்.
இந்நிலையில், பல ஹோட்டல்கள் 7,500 ரூபாய்க்கு அதிகமாக அறை கட்டணம் வசூலிக்கும் நிலையிலும், உணவுக்கு 18 சதவீதத்துக்கு பதிலாக 5 சதவீத ஜி.எஸ்.டி., மட்டுமே செலுத்தி வருவதாக ஜி.எஸ்.டி., அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது குறித்து பெடரேஷன் ஆப் ஹோட்டல் அண்டு ரெஸ்டாரன்ட் அசோசியேஷன்ஸ் ஆப் இந்தியா தலைவர் சியாமா ராஜு தெரிவிக்கையில், 'இது வரி ஏய்ப்பு அல்ல; ஜி.எஸ்.டி., விதிகளில் நீண்ட காலமாக உள்ள தெளிவின்மை மற்றும் விழிப்புணர்வு இல்லாமை ஆகியவற்றின் விளைவே' என்று கூறியுள்ளார்.