இனி சிறிய நிறுவனங்களுக்கு 3 நாட்களுக்குள் ஜி.எஸ்.டி., பதிவு
இனி சிறிய நிறுவனங்களுக்கு 3 நாட்களுக்குள் ஜி.எஸ்.டி., பதிவு
ADDED : நவ 01, 2025 11:46 PM

புதுடில்லி: சிறு நிறுவனங்களுக்கு மூன்றே நாட்களுக்குள் ஜி.எஸ்.டி., பதிவு எண் வழங்கும் நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இதன்படி, ஜி.எஸ்.டி., அமைப்பால் தரவு பகுப்பாய்வின் வாயிலாக சிறு நிறுவனங்கள், குறைந்த செலவில் துவங்கப்படும் புத்தொழில், ஆலோசனை, பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும்; மாதத்துக்கு 2.50 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வரி செலுத்த வேண்டிய நிறுவனங்களும் புதிய நடைமுறையின் கீழ் பயன்பெறலாம்.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், எளிமையாக்கப்பட்ட பதிவு நடைமுறைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. விருப்பத்துக்கு ஏற்ப இந்த நடைமுறையில் இணையவும், விலகவும் முடியும்.
இதுவரையிலான நடைமுறையில், அனைத்து ஆவணங்களையும் சரியாக தாக்கல் செய்யும்பட்சத்தில் ஏழு நாட்களுக்குள் ஜி.எஸ்.டி., பதிவு எண் வழங்கப்படும். அதிக ரிஸ்க் உடைய விண்ணப்பதாரர்களுக்கு, நேரடி சரிபார்ப்பு நடைபெறும் என்பதால் 30 நாட்கள் அல்லது அதற்கு மேலும் ஆகும்.
எளிமையாக்கப்பட்ட ஜி.எஸ்.டி., பதிவு நடைமுறையின் கீழ், புதிதாக விண்ணப்பிக்க கூடிய 96 சதவீதம் பேர் பயன்பெறுவர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி 1.56 கோடி வணிகங்கள் ஜி.எஸ்.டி., பதிவு செய்துள்ளன

