ADDED : நவ 22, 2025 12:21 AM

புதுடில்லி: சந்தை மதிப்பின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக விளங்கும் என்விடியா மீது, செயற்கையாக தேவையை உருவாக்குவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் காலாண்டுக்கான முடிவுகளை என்விடியா நிறுவனம் நேற்று முன்தினம் அறிவித்தது.
இதில் நிகர லாபம் 65 சதவீதம் உயர்ந்து 2.81 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச்சந்தையில் நிறுவனத்தின் பங்கு விலை 5 சதவீதம் உயர்ந்தது. ஆனால், அடுத்த சில மணி நேரத்திலேயே ஏழு சதவீதத்துக்கும் மேலாக சரிந்தது. வருவாயும் நிகர லாபமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், நிறுவனத்தின் கணக்குகளை ஆராய்ந்த போது பில் நிலுவைத்தொகையும்; சிப் இருப்பும் கணிசமாக அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், என்விடியா நிறுவனம் ஏ.ஐ., நிறுவனங்களில் முதலீடு செய்வதும், இந்த முதலீட்டைக் கொண்டு இந்நிறுவனங்கள் என்விடியா சிப்களை வாங்குவதும் ஆதாரங்களோடு தெரிய வந்தது. எனவே நிறுவனத்தின் லாபமும், வருவாய் உயர்வும் ஒரு மாயை என்றும், செயற்கையாக தேவையை உருவாக்குவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

