ADDED : மார் 26, 2025 10:45 PM

சென்னை:சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம் அருகில், 200 கோடி ரூபாயில், 110 ஏக்கரில், 'பின்டெக் சிட்டி' அதாவது நிதிநுட்ப நகரை, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைக்கிறது.
முதல் கட்டமாக, 56 ஏக்கரை மேம்படுத்தி, மனைகளை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் பணி துவங்கியுள்ளது. கடந்த ஆண்டில் தலா, 1.50 ஏக்கர், ஏக்கருக்கு அதிகபட்சம், 35 கோடி ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதை விட, அதிக விலை வழங்கிய இரு நிறுவனங்களுக்கு மனைகள் ஒதுக்கப்பட்டன.
தொடர்ந்து, 5.23 ஏக்கரில் இரு மனைகள், 2.82 ஏக்கரில் ஒரு மனை என, ஏக்கருக்கு அதிகபட்சம், 49 கோடி ரூபாய்க்கு ஏல டெண்டர் கோரப்பட்டது. அதில், 2.82 ஏக்கர் ஏலத்தில் பங்கேற்ற தனியார் நிறுவனம் ஏக்கருக்கு, 56 கோடி ரூபாய் விலை வழங்கி, தேர்வானது. மற்றொரு மனை ஏலத்தில் ஒரு நிறுவனம் மட்டும் பங்கேற்றதால், அது, ரத்து செய்யப்பட்டது.
தற்போது, 2.75 ஏக்கர், 2.58 ஏக்கர் என, இரு மனைகளை ஏக்கருக்கு, 56 கோடி ரூபாய் நிர்ணயம் செய்து, அதை விட அதிக விலை வழங்கும் நிறுவனங்களுக்கு ஒதுக்க டெண்டரை, டிட்கோ கோரியுள்ளது.