ADDED : ஏப் 13, 2025 12:51 AM

சென்னை:புதிதாக துவங்கப்பட்டுள்ள 'ஒன் ஆல்பா வெஞ்சர்ஸ்' நிறுவனம், தமிழகத்தில் தொழில் பூங்கா அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 'ஸ்ரீ கைலாஸ்' குழுமத்தின் ஆதரவோடு துவங்கப்பட்டுள்ள இந்நிறுவனம், தொழில் மற்றும் சரக்கு போக்குவரத்து உள்கட்டமைப்பில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக, சென்னையை அடுத்த ஒரகடத்தில் 12 லட்சம் சதுர அடியில் தொழில் மற்றும் சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க உள்ளதாக, ஒன் ஆல்பா வெஞ்சர்ஸ் தெரிவித்துள்ளது. இரண்டு கட்டங்களாக அமைக்கப்படவுள்ள இந்த பூங்காவின் வாயிலாக, மாநிலத்தின் வாகனம், மின்னணுவியல் மற்றும் அதன் துணை பிரிவுகளில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 6 லட்சம் சதுர அடி பரப்பளவிலான கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த ஓர் ஆண்டுக்குள் இரண்டாம் கட்ட பணிகள் நிறைவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கால நிறுவனங்களின் தேவையை கருத்தில் கொண்டு, வணிகத்தை துவங்குவதற்கு தயார் நிலையில் உள்ள வகையில், இந்த தொழில் பூங்கா அமைக்கப்படும் என, ஒன் ஆல்பா தெரிவித்துள்ளது.

