'இ - இன்வாய்ஸ், இ - வே பில்' இரண்டில் ஒன்று போதும்: உணவு பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
'இ - இன்வாய்ஸ், இ - வே பில்' இரண்டில் ஒன்று போதும்: உணவு பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
ADDED : செப் 04, 2026 07:22 AM
'ஒரே பரிவர்த்தனைக்கு இ - இன்வாய்ஸ், இ - வே பில் ஏதாவது ஒன்றை மட்டும் ஜி.எஸ்.டி., இணையதளத்தில் உருவாக்கும் வகையில் எளிமைப்படுத்த வேண்டும்' என தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம், பொருளாளர் கார்த்திகேயன் தெரிவித்தனர்.
சென்னையில் நடந்த கூட்டத்தில் மத்திய ஜி.எஸ்.டி., தலைமை கமிஷனர் விமலநாதனை சந்தித்தது குறித்து அவர்கள் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., நடைமுறையின்படி ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு அதிகமான வர்த்தகம் கொண்ட உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், வணிகங்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகளுக்கு (பி டூ பி) மின் -ரசீது (இ - இன்வாய்ஸ்) உருவாக்க வேண்டியுள்ளது. அதேநேரத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமான மதிப்புள்ள ரசீதை உருவாக்கும்போது மின் வழிச்சீட்டு (இ - வே பில்) போட வேண்டியுள்ளது. ஒரே பரிவர்த்தனைக்கு இ - இன்வாய்ஸ், இ - வே பில் உருவாக்க வேண்டியுள்ளதால் ஏதேனும் ஒன்றை மட்டும் உருவாக்கி எளிமைப்படுத்த வேண்டும்.
