ADDED : செப் 27, 2024 10:46 PM

புதுடில்லி:வெங்காயம் ஏற்றுமதி மீதான கட்டுபாடுகளை அரசு அடிக்கடி மாற்றி வருவதால், மிகுந்த பாதிப்பு ஏற்படுவதாக, வெங்காய உற்பத்தி மற்றும் வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் வெங்காய ஏற்றுமதியாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
வெங்காயம் ஏற்றுமதி மீது விதிக்கப்பட்டிருந்த 40 சதவீத வரியை, சமீபத்தில் மத்திய அரசு 20 சதவீதமாக குறைத்தது. இந்நிலையில் 20 சதவீத வரியையும் நீக்க வேண்டும் என, இக்கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மேலும், இந்தியாவின் வெங்காய உற்பத்தி, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இருப்பதாகவும்; ஆனால், அரசின் கட்டுப்பாடுகள் விவசாயிகளுக்கும், வணிகர்களுக்கும் கணிசமான நிதி இழப்பை ஏற்படுத்துவதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், வெங்காயம் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் அடிக்கடி மாறுவதால் பாதிக்கப்படுவதாகவும், இது விலை ஏற்ற, இறக்கங்களுக்கு வழிவகுத்து, விளைபொருட்களுக்கான நியாயமான இழப்பீடு கிடைப்பதை தடுக்கிறது.
எனவே, வெங்காயம் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை உடனடியாக நீக்கி, விவசாயிகள் தங்களுடைய விளை பொருட்களை, உலக சந்தையில் நியாயமான விலையில் விற்க அனுமதிக்க வேண்டுமென, கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.