மளிகை கடைகளின் விற்பனையில் பாதியை பிடித்த 'க்விக் காமர்ஸ்' ஆதிக்கம் செலுத்தும் ஆன்லைன் நிறுவனங்கள்
மளிகை கடைகளின் விற்பனையில் பாதியை பிடித்த 'க்விக் காமர்ஸ்' ஆதிக்கம் செலுத்தும் ஆன்லைன் நிறுவனங்கள்
ADDED : நவ 14, 2024 11:16 PM

புதுடில்லி:சில்லரை விற்பனை கடைகளின் ஒட்டுமொத்த விற்பனையில் பாதியளவை, 'க்விக் காமர்ஸ்' எனப்படும் துரித ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் பிடித்துள்ளதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சில்லரை வணிகத்தில் நுகர்வோரின் மனநிலை குறித்து, 'டாட்டம் இண்டெல்ஜென்ஸ்' நிறுவனம் நடத்திய ஆய்வில், வீட்டின் அருகில் உள்ள மளிகை கடைகளில் பொருள் வாங்குவதாக 46 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்தனர்.
மேலும், க்விக் காமர்ஸ் வணிகத்தில் ஈடுபட்டுள்ள பிளிங்கிட், செப்டோ, ஸ்விக்கி, ப்ளிப்கார்ட் மினிட்ஸ் உள்ளிட்ட துரித டெலிவரி ஆன்லைன் நிறுவனங்கள், சில்லரை விலை கடைகளின் மொத்த வர்த்தகத்தில் பாதியை பிடித்திருப்பதும் தெரிய வந்தது.
வேகமாக அதிகரித்து வரும் க்விக் காமர்ஸ் வரவேற்பால், அவற்றின் மொத்த விற்பனை மதிப்பு, தற்போதுள்ள 51,000 கோடி ரூபாயில் இருந்து, இன்னும் ஐந்தாண்டுகளில் 3.40 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பலதரப்பட்ட இடைத்தரகர்கள் இல்லாதது, வர்த்தகப் போட்டியால் குறைவான விலையில் பொருட்கள் கிடைப்பது, இருந்த இடத்தில் இருந்தே குறைந்த நேரத்தில் பொருட்களை பெற முடிவது ஆகிய காரணங்களால், க்விக் காமர்ஸ் தளங்களை பயன்படுத்துவோர் வேகமாக அதிகரிப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
சில்லரை விலை கடைகளில் வழக்கமாக செலவழிக்கும் தொகையில், குறைந்தது நான்கில் ஒரு பங்கை, க்விக் காமர்ஸ் தளங்களுக்கு 82 சதவீத நுகர்வோர் மாற்றிக் கொண்டுள்ளதும் ஆய்வில் தெரிய வந்தது.
இந்த ஆண்டில் இத்துறை 74 சதவீத வளர்ச்சி காணும் என்றும், 2028ம் ஆண்டு வரை, ஆண்டுக்கு 48 சதவீத வளர்ச்சி அடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
குயிக் காமர்ஸ் தளங்களால் திட்டமிடாத ஷாப்பிங் செலவு அதிகரித்துள்ளது
சராசரியாக ஒவ்வொரு ஆர்டரிலும் 400 ரூபாய் செலவிடப்படுகிறது
சில்லரை கடைகளை விட குயிக் காமர்ஸ் ஷாப்பிங் சராசரி தொகை அதிகம்