ADDED : ஆக 23, 2025 10:16 PM

புதுடில்லி:பணத்தை வைத்து விளையாடும், ஆன்லைன் கேம்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால், 'பேமென்ட் கேட்வே' எனப்படும் பணப் பரிமாற்ற சேவை வழங்கும் நிறுவனங்கள், 30,000 கோடி ரூபாய் வரை இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
'ஆன்லைன் கேமிங்' ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டம் அமலுக்கு வந்துள்ளதால், இதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், 'ட்ரீம்11' உள்ளிட்ட பல ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள், இலவச கேம்களை மட்டும் வழங்கத் துவங்கியுள்ளன.
பணம் வைத்து விளையாட்டுகளை இதுவரை வழங்கி வந்ததன் வாயிலாக, யு.பி.ஐ., வழியாக ரேசர்பே, பே-யு, கேஷ்ப்ரீ உள்ளிட்ட ஆன்லைன் பணப் பரிமாற்ற நிறுவனங்கள், பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வந்தன. அது தற்போது தடைபடுவதால், இந்நிறுவனங்களின் வருடாந்திர வளர்ச்சி 15 சதவீதம் வரை பாதிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதனால், யு.பி.ஐ., செயலிகளின் மாதாந்திர மொத்த பணப் பரிமாற்றத்தில், 2 சதவீதம் வரை குறையலாம் என்று இத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
கடந்த ஜூலையில் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களால், யு.பி.ஐ., நிறுவனங்கள் செய்த பரிமாற்றம் ரூ.10,077 கோடி ஆகும்.