'இந்தியாவில் 12 சதவிகிதம் பேரிடம் மட்டுமே கார் வாங்கும் வசதி இருக்கிறது' மாருதி சுசூகி தலைவர் ஆதங்கம்
'இந்தியாவில் 12 சதவிகிதம் பேரிடம் மட்டுமே கார் வாங்கும் வசதி இருக்கிறது' மாருதி சுசூகி தலைவர் ஆதங்கம்
ADDED : ஏப் 28, 2025 12:48 AM

புதுடில்லி:இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உடைய 12 சதவீதம் பேர் மட்டும் கார் வாங்கும் வசதி கொண்டவர்களாக உள்ளனர்.
மீதமுள்ள 88 சதவீதம் பேர், சிறிய காரை கூட வாங்க முடியாத நிலையில் இருக்கின்றனர் என, மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி, நேற்று முன்தினம் தன் நான்காவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.
சிறிய கார்கள் விற்பனை சரிந்ததுடன், நகர்ப்புற சந்தைகளில் தேவை குறைவால், நிகர லாபம் முந்தைய ஆண்டு இதே காலத்தோடு ஒப்பிடுகையில், 4.3 சதவீதம் குறைந்தது.
இந்நிலையில், அந்நிறுவன தலைவர் பார்கவா கூறியதாவது:
நடப்பாண்டில் சிறிய கார்கள் விற்பனை 9 சதவீதம் சரிந்து உள்ளது. நாட்டின் 88 சதவீத மக்களால் வாங்கப்படும் பட்ஜெட் கார் பிரிவில் இந்த சதவீத சரிவு ஏற்பட்டால், வளர்ச்சி எப்படி ஏற்படும்.
இந்தியாவில் 1,000 பேருக்கு 34 என்ற எண்ணிக்கையில் கார்கள் உள்ளன. உலகின் மற்ற நாடுகளைவிட, மிகவும் குறைவு இது.
இந்தியாவில் ஆண்டு வருமானம் 12 லட்சம் ரூபாய்க்கு மேல் உடையவர்கள் 12 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர்.
ஒரு கார் வாங்க வேண்டும் எனில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆகுமென்பதால், சாதாரணமாக குடும்ப வருமானம் மற்றவர்களால் வாங்க இயலாத நிலை உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பயணியர் வாகனங்கள் விற்பனை வளர்ச்சி, ஆண்டுக்கு வெறும் 2- -3 சதவீதமே
2025 - -26ம் நிதியாண்டில், வாகன விற்பனை வளர்ச்சி 1 -- 2 சதவீதம் என சியாம் கணிப்பு
கார்களின் விலை சராசரியாக 80,000 -- 90,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது
ஜப்பானில் மலிவு விலையில், 660 சி.சி., வரையிலான கீ கார்களை போன்று, இந்தியாவில் வரிச்சலுகை தேவை.