ரூ.50,000 கோடி சுயசார்பு நிதி வழங்கப்பட்டதோ 4 சதவீதம்!
ரூ.50,000 கோடி சுயசார்பு நிதி வழங்கப்பட்டதோ 4 சதவீதம்!
ADDED : டிச 14, 2024 12:33 AM

புதுடில்லி:சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க, துவங்கப்பட்ட 50,000 கோடி ரூபாய் சுயசார்ப்பு நிதியில், கடந்த நான்கு ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இது மொத்த நிதியில் நான்கு சதவீதம் மட்டுமே.
இதுகுறித்து லோக்சபாவில் மத்திய எம்.எஸ்.எம்.இ., இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கான, சுயசார்பு நிதி திட்டம் 2020 மே மாதம் துவங்கப்பட்டது. இதில் மத்திய அரசு பங்களிப்பாக 10,000 கோடி ரூபாயும்; தனியார் பங்களிப்பு மற்றும் துணிகர முதலீட்டு நிதியாக மொத்தம் 40,000 கோடி ரூபாயும் பயன்படுத்தப்படும்.
நடப்பு நிதியாண்டில் இதுவரை 91 சிறுதொழில் நிறுவனங்களுக்கு 1,964 கோடி ரூபாய் நிதி ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ பண்டு எனப்படும் இது, தாய் - மகள் நிதி என்ற கட்டமைப்பில் செயல்படுகிறது.
அரசின் பங்களிப்பு நிதி தாய் நிதியாக கருதப்படும் நிலையில், டாடா கேப்பிடல், ஐ.டி.பி.ஐ., கேப்பிடல், சிட்பி வெஞ்சர், ஐ.சி.ஐ.சி.ஐ., வெஞ்சர், இண்டியன் ஏஞ்சல் நெட்வொர்க், ஆன்ட்லர் உட்பட 53 நிறுவனங்கள் மகள் நிதி பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
சிறுதொழில் நிறுவனங்களுக்கு அரசு நிதியில் இருந்து அளிக்கப்படும் தொகையின் ஐந்து மடங்கை, மகள் நிதியாளர்கள் முதலீடு செய்ய வேண்டும் என்பது விதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.

