யு.பி.எஸ்., திட்டத்திலிருந்து என்.பி.எஸ்.,சுக்கு மாற வாய்ப்பு
யு.பி.எஸ்., திட்டத்திலிருந்து என்.பி.எஸ்.,சுக்கு மாற வாய்ப்பு
ADDED : ஆக 27, 2025 01:02 AM

புதுடில்லி:புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த பென்ஷன் திட்ட பயனாளர்கள், என்.பி.எஸ்., எனும் தேசிய பென்ஷன் திட்டத்துக்கு மாறுவதற்கு, மத்திய அரசு ஒரு முறை வாய்ப்பு வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தகுதியுள்ள பணியாளர்கள் பணி ஓய்வு பெறுவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னதாகவோ, விருப்ப ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவோ, இந்த மாற்றத்தை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டதுதான் யு.பி.எஸ்., எனும் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம். இது நடப்பாண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 25 ஆண்டுகள் பணியாற்றிய மத்திய அரசு பணியாளர்களுக்கு, பணி நிறைவுக்கு முன்னதாக பெற்ற அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். கடந்த ஜூலை 20ம் தேதி வரை, இத்திட்டத்தில் 31,555 பணியாளர்கள் இணைந்துள்ளனர்.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் இணைய, வரும் செப்டம்பர் 30ம் தேதி தான் கடைசி நாளாகும். இந்நிலையில், தேசிய பென்ஷன் திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக, யு.பி.எஸ்., திட்டத்தை தேர்வு செய்துள்ளவர்கள், என்.பி.எஸ்., திட்டத்துக்கு மாற ஒரு முறை வாய்ப்பு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.