ADDED : மார் 07, 2024 01:33 AM

மும்பை: இனி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வாங்கும்போது, விசா, மாஸ்டர், ரூபே என எந்த கார்டு விருப்பமானதோ அதை வாங்கி கொள்ளும் வாய்ப்பை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை வழங்கும் போது, வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு விருப்பமான கார்டு நெட்வொர்க்கை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்குமாறு வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் ரூபே, மாஸ்டர், விசா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு கார்டு நெட்வோர்க்குகள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கான பரிவர்த்தனை சேவைகளை வழங்குகின்றன.
வங்கிகள், குறிப்பிட்ட சில கார்டு நெட்வொர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அந்த நெட்வொர்க் கார்டுகளை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதால், வாடிக்கையாளர்கள் மற்றவற்றை பெற முடிவதில்லை.
இதையடுத்து, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கார்டுகளை வழங்குமாறு வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்க முடியாத வகையில், கார்டு வழங்குபவர்கள், கார்டு நெட்வொர்க் நிறுவனங்களுடன் எவ்வித ஒப்பந்தத்திலும் நுழைய கூடாது.
இந்த உத்தரவு, இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து, ஆறு மாதங்களில் நடைமுறைக்கு வரும்.
ஏற்கனவே கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அடுத்த முறை தங்கள் கார்டுகளை புதுப்பிக்கும் போது, அவர்களுக்கு இந்த தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த உத்தரவு, சொந்தமாக கார்டு நெட்வொர்க் வைத்திருக்கும், கார்டு வழங்கும் நிறுவனங்களுக்கு பொருந்தாது. மேலும், பத்து லட்சம் அல்லது அதற்கும் குறைவான ஆக்டிவ் கார்டுகளை வழங்கிய நிறுவனத்துக்கும் இது பொருந்தாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரெடிட், டெபிட் கார்டுகளை வழங்கும் போது, வாடிக்கையாளர்கள், அவர்களுக்கு விருப்பமான கார்டு நெட்வொர்க்கை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்குமாறு வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

