வாகன தயாரிப்பு தொழில்நுட்ப மையம் தமிழகத்தில் துவக்கியது 'ஆப்டிவ்'
வாகன தயாரிப்பு தொழில்நுட்ப மையம் தமிழகத்தில் துவக்கியது 'ஆப்டிவ்'
ADDED : ஆக 20, 2025 01:44 AM

சென்னை:அயர்லாந்து நாட்டை சேர்ந்த 'ஆப்டிவ்' என்ற தொழில்நுட்ப நிறுவனம், வாகன தயாரிப்புக்கான புதிய தொழில்நுட்ப மையத்தை சென்னையில் துவக்கி உள்ளது. இது நாட்டின், நான்காவது தொழில்நுட்ப மையமாகும்.
கிட்டத்தட்ட 34,000 சதுர அடி பரப்பளவில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் முக்கிய பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்க நவீன ஆய்வகங்கள், சோதனை கட்டமைப்புகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இங்கு, அடுத்த ஆண்டுக்குள் 500 பொறியாளர்கள் வரை பணியாற்றுவர் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாகனங்களுக்கான அடுத்த தலைமுறை அடாஸ் வசதி, உட்புற கேபின் தொழில்நுட்பங்கள், மென்பொருளில் இயங்கும் இன்போடெயின்மென்ட் தளங்கள் ஆகியவை உருவாக்க இந்த மையம் உதவுகிறது.
அதே சமயம், பாதுகாப்பான, பசுமையான, வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட உள்ளன.
ஆப்டிவ் நிறுவனம், இந்தியாவில் 8 உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளது. நம் நாட்டில் இதன் ஆலைகளில் 13,000 பேர் பணியாற்றுகின்றனர்.