ADDED : நவ 30, 2024 11:35 PM

புதுடில்லி:ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை பதிவிடும் எண்ணை அனுப்புவதற்கான, புதிய விதிமுறை இன்று அமலுக்கு வருகிறது.
பணப்பரிவர்த்தனையில் முக்கிய பங்கு வகிக்கும் ஓ.டி.பி., நடைமுறையில், பாதுகாப்பை அதிகரிக்க தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'டிராய்' முடிவு செய்தது. ஓ.டி.பி., அனுப்பும் நிறுவனங்கள், அமைப்புகளை அடையாளம் காணக்கூடிய வகையில், விதிமுறைகளை கடுமையாக்கியது.
இதுவரை, வங்கிகள், தொலைபேசி நிறுவனங்களிடம் பதிவு செய்யும் ஓ.டி.பி., குறுஞ்செய்தி டெலிவரி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் சுருக்கப்பெயரை மட்டுமே வழங்கின. தொடர்புக்கான தொலைபேசி எண் எதையும் பதிவு செய்யாமல் இருந்தன.எனவே, ஓ.டி.பி., மற்றும் மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்பும் நிறுவனங்களை அடையாளம் காண்பதில் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி; வங்கிகளுக்கும் சிரமம் இருந்தன.
எனவே, இனி, ஓ.டி.பி., அல்லது மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்பும் நிறுவனங்கள், அமைப்புகள் தங்களது தொடர்பு தொலைபேசி எண்ணையும் சேர்த்து வழங்க வேண்டும் என்பதை டிராய் கட்டாயமாக்கி உள்ளது.
இந்த விதியை நிறைவு செய்யத் தவறும் நிறுவனங்களின் ஓ.டி.பி.,க்கள் இனி தொலைபேசி நிறுவனங்களால் 'பிளாக்' செய்யப்படும். வாடிக்கையாளர்களுக்கு அவை டெலிவரி செய்யப்படாது.
இதன் வாயிலாக, தேவையற்ற, மோசடி நோக்கிலான ஓ.டி.பி.,க்கள், குறுஞ்செய்திகள் தடுக்கப்படும் என்பதால், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்.