சேவைகள் துறை ஏற்றுமதியில் நம் நாட்டின் பங்கு அதிகம்
சேவைகள் துறை ஏற்றுமதியில் நம் நாட்டின் பங்கு அதிகம்
ADDED : அக் 22, 2025 12:12 AM

புதுடில்லி: சேவைகள் துறை ஏற்றுமதிக்கான சர்வதேச மையமாக இந்தியா வேகமாக உருவெடுத்து வருவதாக என்.எஸ்.இ., எனும் தேசிய பங்குச் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
என்.எஸ்.இ., தலைமை பொருளாதார ஆலோசகர் தீர்த்தங்கர் பட்நாயக் தெரிவித்ததாவது:
சீனா எப்படி தயாரிப்பு துறையின் சர்வதேச மையமாக விளங்குகிறதோ, அதே போல் விரைவில் இந்தியாவும் சேவைகள் துறையின் சர்வதேச மையமாக விளங்கும். கடந்த 30 ஆண்டுகளில், நாட்டின் சரக்கு ஏற்றுமதியின் ஆண்டு கூட்டு வளர்ச்சி 9.80 சதவீதமாக உள்ள நிலையில், சேவைகள் துறையின் ஆண்டு கூட்டு வளர்ச்சி 14.80 சதவீதமாக உள்ளது.
சர்வதேச சேவைகள் துறை ஏற்றுமதியில் இந்தியா தற்போது 4.30 சதவீத பங்குடன் ஏழாவது இடத்தில் உள்ளது. தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக சேவைகள் ஆகியவை நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதியில் 75 சதவீத பங்கு வகிக்கின்றன.
கடந்த நிதியாண்டில் தொழில்நுட்ப ஏற்றுமதி மட்டும் 17.60 லட்சம் கோடி ரூபாயை எட்டியது.
முக்கிய பொருளாதார மற்றும் அடிப்படை மாற்றங்களே நாட்டின் சேவைகள் ஏற்றுமதி வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.
ஜி.எஸ்.டி., திவால் மற்றும் நொடிந்துபோதல் சட்டம், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி சலுகை ஆகியவை இதில் முக்கியமானவை.
அடுத்த சில ஆண்டுகளுக்குள் இந்தியா 440 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமாக முன்னேறும். இதற்கு சேவைகள் துறையின் வலுவான ஏற்றுமதி, அதிக இளைஞர் மற்றும் பணியாளர் திறன் மற்றும் பங்குச் சந்தை பயன்பாடு அதிகரிப்பு ஆகியவை உதவியாக இருக்கும்.
வரும் காலங்களில் தனியார் முதலீடு, எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களை வலுப்படுத்துவது, கல்வி - வேலைவாய்ப்பு இடையிலான இடைவெளியை குறைப்பது, பசுமை முதலீடு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
1 ஜி.சி.சி., எனும் சர்வதேச திறன் மையங்களின் மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது இந்தியா
2 கடந்த 2018 - 19ல் 1,430 ஆக இருந்த ஜி.சி.சி., எண்ணிக்கை 2023 - 24ல் 1,700 ஆக அதிகரிப்பு
3 வ ரும் 2029 - 30ம் நிதியாண்டுக்குள் ஜி.சி.சி., சந்தை மதிப்பு 8.80 லட்சம் கோடி ரூபாயை எட்ட வாய்ப்பு.