ADDED : நவ 04, 2024 12:57 AM

இந்தியர்களின் விருப்ப பட்டியலில், மற்ற செல்வ வளங்களை விட சொந்த வீடு வாங்கும் கனவு முன்னிலை வகிப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக இளம் பெண்கள் மத்தியில் இந்த எண்ணம் வலுவாக உள்ளது.
இணைய நிதிச்சேவை நிறுவனம் பேங்க்பஸார், மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களில் வசிக்கும் தொழில்முறை ஊழியர்கள் மத்தியில் ஆய்வு மேற்கொண்டு, இந்தியர்களின் விருப்ப பட்டியல் அட்டவணையை வெளியிட்டு உள்ளது.
கடந்த, 2022 ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, கடன் இல்லாமல் இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், 25 லட்சம் வரை கடன் பெற்றுள்ளவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
மாதம் குறைந்த பட்சம் முப்பதாயிரம் ஊதியம் பெறுபவர்கள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நிதிச்சேவைகளை முதன்மையாக பயன்படுத்துபவர்களாக இந்த பிரிவினர் அமைகின்றனர்.
இந்த பிரிவில் உள்ளவர்கள் மத்தியில், குறிப்பாக இளம் பெண்கள் மத்தியில் சொந்த வீடு வாங்கும் விருப்பம் முதன்மையாக உள்ளது. சுற்றுலா பயணம் மற்றும் ஓய்வு கால திட்டமிடல் அடுத்த இடங்களில் உள்ளன. மேலும் பெண்கள் மத்தியில் தொழில்முனைவு ஆர்வமும் அதிகரித்துள்ளது.