பாகிஸ்தானின் தங்க சுரங்க திட்டம் தேவைக்கு அதிகமாக குவியும் முதலீடு
பாகிஸ்தானின் தங்க சுரங்க திட்டம் தேவைக்கு அதிகமாக குவியும் முதலீடு
ADDED : ஆக 04, 2025 12:37 AM

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில், தங்கம் மற்றும் தாமிர சுரங்கம் அமைக்கும் திட்டத்துக்கு, 43,000 கோடி ரூபாய் வரை நிதி பங்களிக்க, சவுதி அரேபியா மற்றும் சர்வதேச நன்கொடையாளர்கள், வங்கிகள், ஏஜன்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில், ரீகோ டிக் என்ற சுரங்கத் திட்டத்தை துவங்க, அந்நாட்டு அரசு, சுரங்க நிதியை அறிவித்து உள்ளது. சுரங்க திட்டத்துக்கு மொத்த நிதித்தேவை, கிட்டத்தட்ட 26,000 கோடி ரூபாயாக கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதைத் தாண்டி, 43,000 கோடி ரூபாய் வரை நிதி வழங்க, இதுவரை விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 25 சதவீத பங்கை பாகிஸ்தான் அரசு, 8,500 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கி, உரிமை கொண்டிருக்கும் என்ற நிலையில், மீதமுள்ள 75 சதவீதத்துக்கு பல நிறுவனங்கள் தங்கள் நிதிப்பங்கை அளிக்க முன்வந்துள்ளன.
திட்டப் பணிகள் துவங்கியதுமே உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, இஸ்லாமிய மேம்பாட்டு வங்கி, இன்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன், அமெரிக்காவின் எக்சிம் பேங்க் ஆகியவை மட்டுமின்றி, ஜெர்மனி, டென்மார்க்கை சேர்ந்த முதலீட்டு நிறுவனங்களும் ரேகோ டிக் சுரங்க திட்டத்தில் பங்களிக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது.
சவுதி அரேபியாவின் மனாரா மினரல்ஸ் நிறுவ னம் சார்பில், சுரங்கத்தின் 10 முதல் 20 சதவீத பங்கை பெற பேச்சு நடத்தப்படுகிறது. இதன் மூலம், தாமிரம், தங்கச் சுரங்கத் துறையில் சவுதி அரேபியா தனது வணிகத்தை விரிவாக்க திட்டமிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், ஈரான் நாடுகளின் எல்லையை ஒட்டி, மேற்கு பலுசிஸ்தானில் அமைக்கப்படும் சுரங்கத்தில் இருந்து, மொத்தம் 4 லட்சம் டன் தாமிரமும் 5 லட்சம் அவுன்ஸ் அதாவது கிட்டத்தட்ட 15,552 கிலோ தங்கமும் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பலுசிஸ்தான் பழமைவாத, பிரிவினைவாத, பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பகுதியில் இயற்கை வளங்கள் நிறைந்திருந்தும், முதலீடு செய்ய இதுவரை யாரும் முன்வராததால், மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது.
தற்போது இத்திட்டம் முடிக்கப்பட்டு, எதிர்பார்க்கும் அளவுக்கு தங்கமும் தாமிரமும் கிடைத்தால், சரிவில் கிடக்கும் பாகிஸ்தான் பொருளாதாரம் மீள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.