பாலாறு - பொருந்தலாறு நீரேற்று மின் திட்டம்: மின் வாரியம் கடிதம்
பாலாறு - பொருந்தலாறு நீரேற்று மின் திட்டம்: மின் வாரியம் கடிதம்
ADDED : ஆக 26, 2025 12:39 AM
சென்னை: திண்டுக்கல் மாவட்டத்தில், 1,100 மெகா வாட் திறன் உடைய பாலாறு - பொருந்தலாறு நீரேற்று மின் திட்டத்தை, பொதுத்துறையை சேர்ந்த என்.எல்.சி., ரினீயூவபிள் வாயிலாக செயல் படுத்த அனுமதி கேட்டு, தமிழக அரசுக்கு, மின் வாரியம் கடிதம் எழுதியுள்ளது.
நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், 14,500 மெகா வாட் திறனில், 15 நீரேற்று மின் நிலையங்களை, பி.பி.பி., எனப்படும் பொது - தனியார் கூட்டு முயற்சியில் அமைக்க, மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம் முடிவு செய்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில், 1,100 மெகா வாட் திறன் நீரேற்று மின் திட்டத்தை என்.எல்.சி., ரினீயூவபிள் வாயிலாக அமைக்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இத்திட்டத்தில் மின் வாரியத்தின் பங்கு, 26 சதவீதமும், என்.எல்.சி., ரினீயூவபிள் பங்கு, 74 சதவீதமும் இருக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு அரசு அனுமதி அளித்ததும், அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.