ADDED : அக் 04, 2025 01:04 AM

புதுடில்லி:இந்தியாவின் பாமாயில் இறக்குமதி, கடந்த செப்டம்பரில் 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை கண்டுள்ளது. பாமாயிலை விட விலை குறைவு என்பதால், சோயா எண்ணெய் இறக்குமதி 3 ஆண்டுகளில் காணாத அளவுக்கு அதிகரித்து உள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்து உள்ளனர்.
பண்டிகை காலங்களில் இனிப்புகள், நொறுக்கு தீனிகள் தயாரிப்பில் அதிகளவில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய், குறிப்பாக பாமாயில் தேவை அதிகமாக இருக்கும்.
நாட்டின் மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி, கடந்த செப்டம்பரில் 0.70 சதவீதம் குறைந்து, 1.61 மில்லியன் டன்னாக குறைந்து உள்ளது.
இதில், முந்தைய மாதத்தோடு ஒப்பிடுகையில், பாமாயில் இறக்குமதி, 15.90 சதவீதம் குறைந்து, 8,33,000 மெட்ரிக் டன்னாக பதிவாகி உள்ளது. அதே சமயம், கடந்த 2022, ஜூலைக்கு பின்னர், செப்டம்பரில் சோயா எண்ணெய் இறக்குமதி, 37.3 சதவீதம் அதிகரித்து, 5,05,000 டன்னாக பதிவாகி உள்ளது.
சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 5.80 சதவீதம் அதிகரித்து, எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு 2,72,000 டன்னாக அதிகரித்து உள்ளது.
கடந்த ஜூன் - ஆகஸ்ட்டில் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டதால், இந்தியாவில் பாமாயில் கையிருப்பு போதுமான அளவில் உள்ளது.
இந்தோனேஷியா, மலேஷியாவில் இருந்து அதிகளவில் பாமாயில், அர்ஜென்டினா, பிரேசில், ரஷ்யா, உக்ரைனில் இருந்து சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய், இறக்குமதி
நீண்ட காலத்துக்கு பின்னர், செப்டம்பரில், இந்தியா 11,000 டன் சோயா எண்ணெயை சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது