ADDED : ஜூன் 03, 2025 11:08 PM

பிரயாக்ராஜ்:யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்டுள்ள 273 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., அபராதத்தை எதிர்த்து, அந்நிறுவனம் தாக்கல் செய்த மனுவை, அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்தின் உத்தராகண்ட், ஹரியானா, மஹாராஷ்டிராவில் உள்ள மூன்று உற்பத்தி ஆலைகளை பயன்படுத்தி, அதிக மதிப்பிலான ஜி.எஸ்.டி., உள்ளீட்டு வரிப் பயனை பெறுவதாகவும், ஆனால், இதற்கேற்ப வருமான வரி செலுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து, ஜி.எஸ்.டி., புலனாய்வுக்கான பொது இயக்குனரகம் விசாரணையை துவங்கியது. பதஞ்சலி நிறுவனம் உண்மையில் எந்த பொருட்களையும் வினியோகிக்காமல், போலியாக வரிப் பயனை பெற்று வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 273.51 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பதஞ்சலி நிறுவனம், மனு தாக்கல் செய்தது. அபராதத்தில் குற்ற வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளடங்கியுள்ளதால், குற்ற வழக்கு விசாரணைக்கு பின்னரே அபராதம் விதிக்க முடியும் என்று வாதிட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் அபராதம் விதிப்பதற்கான அதிகாரம், வரித்துறை அதிகாரிகளுக்கு உள்ளது என, தெரிவித்தனர்.