ADDED : அக் 26, 2024 03:46 AM

சென்னை:சென்னையை அடுத்த பட்டாபிராமில், தமிழக அரசு கட்டியுள்ள 'டைடல் பார்க்' கட்டடத்தில் அலுவலகங்களை வாடகைக்கு விடும் பதிவு துவங்கியுள்ள நிலையில், இதுவரை இரு நிறுவனங்கள் முன்பதிவு செய்துள்ளன.
தமிழக அரசு, சென்னை தரமணியில் உலகத்தரத்தில் டைடல் பார்க் கட்டடம் கட்டியது. அவற்றில் உள்ள அலுவலக கட்டடங்கள், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதனால், தென் சென்னையில் ஐ.டி., துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகின.
இதேபோல், வட சென்னையிலும் ஐ.டி., துறை சார்ந்த வேலைவாய்ப்பை அதிகளவில் உருவாக்கும் நோக்கில், பட்டாபிராமில், 21 தளங்களுடன், 5.50 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. அங்கு, அலுவலக அறை, கூட்ட அறை உட்பட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.
முதல்வர் ஸ்டாலின், பட்டாபிராம் டைடல் பார்க் கட்டடத்தை விரைவில் துவக்கி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடு முழுவீச்சில் நடக்கிறது. அங்குள்ள அலுவலக இடங்களை வாடகைக்கு விடுவதற்கான பதிவு தற்போது துவங்கியுள்ளது.
இதுவரை, ஒரு 'ஸ்டார்ட் அப்' நிறுவனம் உட்பட இரு நிறுவனங்கள் முன்பதிவு செய்துள்ளன.
*ஒரு சதுர அடி வாடகை ரூ.28
*பராமரிப்பு கட்டணம் சதுர அடி ரூ.11
*5,000 - 6,000 நபருக்கு வேலைவாய்ப்பு