ADDED : ஜன 24, 2025 10:12 PM

புதுடில்லி:தற்காலிகப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், இ.பி.எஸ்., எனப்படும் பணியாளர் ஓய்வூதிய திட்டத்தை துவக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
உணவு, பொருட்கள் டெலிவரி, கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான பணியில் ஈடுபட்டுள்ள தற்காலிக பணியாளர்களுக்கு, போதிய சமூக பாதுகாப்புகள் இல்லாததை, பல்வேறு ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
இதையடுத்து, பணியாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு, விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு போன்ற அரசு சமூக பாதுகாப்பு திட்டங்களின் பலன்களை விரிவுபடுத்தும் வகையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பல்வேறு தளங்களில் இயங்கி வரும் இவ்வகை தொழிலாளர்களுக்காக, சில ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட சமூக பாதுகாப்பு விதிகள், தொழிலாளர் குறியீடுகளில் சேர்க்கப்பட்டன. இருப்பினும், பல மாநிலங்கள் இன்னும் இதில் இணையாததால், இக்குறியீடுகள் செயல்படுத்தப்படவில்லை.
இதையடுத்து, இப்பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் முக்கிய முன்னுரிமையாக மாறியுள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதை வடிவமைக்க, மூத்த அரசு அதிகாரி தலைமையின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் வேலை செய்வதை நிறுத்தியவுடன் அவர்கள் அணுகக்கூடிய ஓய்வூதிய சேமிப்பு வழிமுறைகளை உருவாக்குவதே, இ.பி.எஸ்., திட்டத்தின் குறிக்கோள் ஆகும்.