செலவிடுவதில் மக்கள் மனமாற்றம் தானியம், பருப்பு செலவு 5சதவீதம் சரிவு துாய்மை பராமரிப்புக்கு இந்தியர்கள் கூடுதல் செலவு
செலவிடுவதில் மக்கள் மனமாற்றம் தானியம், பருப்பு செலவு 5சதவீதம் சரிவு துாய்மை பராமரிப்புக்கு இந்தியர்கள் கூடுதல் செலவு
ADDED : ஜன 04, 2025 11:54 PM

புதுடில்லி:உணவுப் பொருட்களில் இருந்து உணவு அல்லாத பொருட்களுக்கு இந்தியர்கள் அதிகம் செலவழிக்கத் துவங்கி உள்ளனர். மக்களின் செலவழிப்பு வழக்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த  மாற்றத்தால், தானியங்கள், பருப்புகளுக்கான செலவு ஐந்து சதவீதம் குறைந்துள்ளதாக, பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இதுகுறித்து எஸ்.பி.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
கடந்த 12 ஆண்டுகளில், கிராமம், நகரம் வேறுபாடின்றி, மக்களின் செலவழிப்பு, நுகர்வு வழக்கத்தில் மாறுதல் ஏற்பட்டு உள்ளது. உணவுப் பொருட்களுக்கு செலவிடுவதைவிட உணவு அல்லாத பொருட்களுக்கு கூடுதலாக செலவழிப்பது தெரிய வந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி, அரசின் கொள்கைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவற்றால், நுகர்வு வழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கிராமங்களில் 2011-12ல் 52.90 சதவீதமாக இருந்த உணவுக்கான செலவு, 2023-24ல் 47.04 சதவீதமாக குறைந்துள்ளது. நகரங்களில் இது, 42.62 சதவீதத்தில் இருந்து 39.68 சதவீதமாகியுள்ளது. கிராமப்புறங்களில் உணவுக்கான செலவழிப்பு 5.86 சதவீதம் குறைந்துள்ள நிலையில், நகரங்களில் இது 2.94 சதவீதம் குறைந்து உள்ளது.
நாட்டின் மாறி வரும் சமூக, பொருளாதார சூழலை பிரதிபலிக்கும் வகையில், உணவுக்கான செலவழிப்பை இதர செலவினங்கள் விஞ்சியுள்ளன. ஆடைகள், காலணிகளுக்கான செலவிடலும் குறைந்திருப்பதற்கு, முந்தைய வரி விதிப்பு முறையைவிட ஜி.எஸ்.டி., குறைவாக இருப்பதும் காரணம்.
துாய்மை இந்தியா விழிப்புணர்வு காரணமாக, துாய்மை பராமரிப்புக்கு இந்தியர்கள் செலவிடுவதும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

