ADDED : நவ 09, 2025 01:31 AM

புதுடில்லி: மத்திய அரசு, 15 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்க உள்ளது. மேலும், கரும்புச்சக்கையிலிருந்து பெறப்படும் மொலாசஸ் மீதான 50 சதவீத ஏற்றுமதி வரியையும் முழுமையாக ரத்து செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கரும்பு விவசாயிகள் குவின்டாலுக்கு 3,550 ரூபாய் விலையில் அரசே கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்று கேட்டு போராடி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். கரும்பின் ஆலை கொள்முதல் விலை குறைந்ததை அடுத்து மத்திய அரசு 10 லட்சம் டன் அளவுக்கு சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதித்ததாகவும், தற்போது உள்ள மிகை உற்பத்தியை சமாளிக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிட்டு உள்ளார்.
இந்நிலையில், 2025- - 26ல் 15 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அரசு முடிவெடுத்திருப்பதாக உணவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். 20 லட்சம் டன் ஏற்றுமதிக்கு சர்க்கரை ஆலைகள் அனுமதி கோரியிருந்த நிலையில், மீதமுள்ள 5 லட்சம் டன்னுக்கும் ஏற்றுமதி அனுமதி கிடைத்துவிடும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

