இலவச உணவு தானியங்களை பணவீக்க தரவுகளில் சேர்க்க திட்டம்
இலவச உணவு தானியங்களை பணவீக்க தரவுகளில் சேர்க்க திட்டம்
ADDED : அக் 07, 2025 12:06 AM

புதுடில்லி, சில்லரை விலை பணவீக்க குறியீட்டில், பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச உணவு தானியங்களை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக பொது மக்களிடம் கருத்து கேட்டுள்ளது. வரும் 22ம் தேதி வரை கருத்து தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் சில்லரை விலை பணவீக்க குறியீட்டில், இலவச உணவு தானியங்களின் தாக்கத்தை சரியாக பிரதிபலிக்க உதவும் என மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2023 ஜனவரி முதல், நாடு முழுதும் கிராமப்புறங்களில் வசிக்கும் 75 சதவீத மக்களுக்கும்; நகர்ப்புறங்களில் வசிக்கும் 50 சதவீத மக்களுக்கும், பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போதைய சில்லரை விலை பணவீக்க குறியீட்டில், பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்கள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. சர்வதேச அளவிலும் இந்த நடைமுறையே பின்பற்றப்படுகிறது.
எனினும், மேற்கத்திய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் சமூக நலத் திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தப்படுவதால், இது சந்தை விலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் பணவீக்கத்தை கணக்கிடும்போது இதை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என வாதிட்டுள்ளது.
இதன்படி, அடுத்தாண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ள சில்லரை விலை பணவீக்க குறியீட்டில், அரிசி, கோதுமை பிரிவுகளில் பணவீக்கத்தை கணக்கிட, பொது வினியோக திட்டம் மற்றும் சந்தை விலை நிலவரம் இரண்டுமே கணக்கில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.