வணிக வாகனங்களுக்கும் நட்சத்திர மதிப்பீடு பாதுகாப்பை உறுதி செய்ய திட்டம்: நிதின் கட்கரி
வணிக வாகனங்களுக்கும் நட்சத்திர மதிப்பீடு பாதுகாப்பை உறுதி செய்ய திட்டம்: நிதின் கட்கரி
ADDED : ஏப் 26, 2025 12:48 AM

புதுடில்லி:லாரி ஓட்டுநர்களின் வேலை நேரத்தை ஒழுங்கு படுத்துவது மற்றும் மின் ரிக் ஷாக்களுக்கு நட்சத்திர மதிப்பீடு முறையை அரசு அமல்படுத்துவது ஆகிய முயற்சியில் உள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா முழுதும் 16.2 லட்சம் இ - ரிக் ஷாக்கள் எனப்படும் மின்சார ரிக் ஷாக்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
நடவடிக்கை
இவை தற்போதுள்ள சட்டப்பூர்வ வேக கட்டுப்பாட்டு வரம்பான 25 கி.மீ., வேகத்தை மீறுகின்றன. இதனால் விபத்துகள் அதிகரிக்கின்றன. குறிப்பிடத்தக்க பாதுகாப்பு சிக்கல்களை எதிர்கொள்ளும் பேட்டரியில் இயங்கும் இ - ரிக் ஷாக்களின் தரம், பாதுகாப்புக்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
விபத்து மற்றும் இறப்புகளை குறைக்கும் விதத்தில் அமல்படுத்த உள்ள இத்திட்டம், லாரிகள் மற்றும் பிற கனரக வணிக வாகனங்களுக்கும் நீட்டிக்கப்படும்.
தற்போது ஒரு நாளைக்கு 13 முதல் 14 மணி நேரம் வரை உள்ள லாரி ஓட்டுநர்களின் வேலை நேரத்தை ஒழுங்குபடுத்தவும், சட்டம் ஒன்றை அமைச்சகம் உருவாக்கி வருகிறது.
ஓட்டுநர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, நாடு முழுதும் 32 அதிநவீன ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களை அமைத்து வருகிறோம். வர்த்தக வாகனங்களில் குளிரூட்டப்பட்ட ஓட்டுநர் அறை ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நோக்கம்
வாகனங்களின் தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, 2023ம் ஆண்டில் பாரத் என்.சி.ஏ.பி., எனப்படும் புதிய கார் மதிப்பீட்டு திட்டம் துவங்கப்பட்டது.
இதை மாதிரியாகக் கொண்டு, லாரிகள் மற்றும் வணிக வாகனங்களுக்கான பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் நட்சத்திர மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.
உலகளவில் இந்தியாவில் அதிக சாலை விபத்துகள் நடக்கின்றன. ஆண்டுதோறும் 4.80 லட்சம் விபத்துகள் மற்றும் 1.80 லட்சம் இறப்புகள் ஏற்படுகின்றன

