'இந்தியா, பிரிட்டன் உறவுக்கு உதவியவர் ஸ்வராஜ் பால்' மறைந்த தொழிலதிபருக்கு பிரதமர் இரங்கல்
'இந்தியா, பிரிட்டன் உறவுக்கு உதவியவர் ஸ்வராஜ் பால்' மறைந்த தொழிலதிபருக்கு பிரதமர் இரங்கல்
ADDED : ஆக 23, 2025 12:46 AM

புதுடில்லி:லண்டனில் நேற்று முன்தினம் காலமான, பிரபல வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர் ஸ்வராஜ் பால், 94, பிரிட்டன் - இந்தியா இடையிலான நெருங்கிய உறவுக்கு சிறப்பாக பங்களித்ததாக, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில், கபாரோ குழுமம் என்ற பெயரில் ஸ்டீல் மற்றும் பொறியியல் பொருட்கள் வணிகத்தை துவங்கிய இவர், வட அமெரிக்கா, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் இதை விரிவுபடுத்தினார்.
ஸ்வராஜ் பால், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கடந்த 1931 பிப்ரவரி 18ம் தேதி பிறந்தார். இவரது தந்தை, 'பைரே லால் அபீஜய் சுரேந்திரா குழுமம்' என்ற பெயரில் உருக்காலை வணிகத்தை நடத்தி வந்தார். இந்தியாவின் பழம்பெரும் வணிக குழுமங்களில் இதுவும் ஒன்று.
கடந்த 1966ல் தன் மகள் அம்பிகா பாலின் சிகிச்சைக்காக பிரிட்டன் சென்ற ஸ்வராஜ் பால், மகள் இறந்ததும் அவரது பெயரில் அறக்கட்டளையைத் துவங்கினார். இதன் வாயிலாக இன்றளவும் பல்வேறு தொண்டு காரியங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 1968ல் கபாரோ நிறுவனத்தை துவங்கிய இவர், இதை பிரிட்டனின் மிகப்பெரிய ஸ்டீல் உருக்கும் மற்றும் வினியோகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக மாற்றினார் .