விமான இன்ஜின் பராமரிப்புக்கு ஹைதராபாதில் புதிய மையம் துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
விமான இன்ஜின் பராமரிப்புக்கு ஹைதராபாதில் புதிய மையம் துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
ADDED : நவ 27, 2025 12:13 AM

ஹைதராபாத்: “மிக வேகமாக முன்னேறி வரும் விமான துறையால், உலகளாவிய முதலீட்டாளர்களின் நம்பகமான கூட்டாளியாக இந்தியா விளங்குகிறது,” என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்து உள்ளார்.
விமான இன்ஜின்களின் பராமரிப்பு, பழுது பார்த்தல் உள்ளிட்ட சேவைகளை, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சப்ரான் என்ற நிறுவனம் செய்து வருகிறது. நம் நாட்டில், இந்நிறுவனத்தின் மையம் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் துவக்கப்பட்டுள்ளது. இதன் சேவையை 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
வணிகம் தொடர்பான ஏராளமான விதிகளை இந்தியா குற்றமற்றதாக்கி உள்ளது. ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்கள், வரி மதிப்பீடு, புதிய தொழிலாளர் சட்டங்கள், திவால் நிலை குறியீடு போன்றவை நிர்வாகத் தை முன்னெப்போதும் இல்லாத எளிமையாகவும், வெளிப்படையாகவும் ஆக்கியுள்ளன.
இந்த முயற்சிகள் காரணமாக, நம் நாடு இப்போது உலகின் ஒரு நம்பகமான முதலீட்டு கூட்டாளியாகவும், வணிகத்தில் மிகப்பெரிய சந்தையாகவும் வளர்ந்து, மாபெரும் உற்பத்தி மையமாக மாறியுள்ளது.
விமான போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், எம்.ஆர்.ஓ., எனப்படும் பராமரித்தல், பழுது நீக்குதல், இயக்குதல் தொடர்பான வசதிகளுக்கான தே வையும் அதிகரித்துள்ளது.
நம் நாட்டில் இயங்கும் விமானங்களுக்கான எம்.ஆர்.ஓ., பணிகளில் 85 சதவீதம் வெளிநாடுகளில் நடக்கிறது. இந்தியா போன்ற பரந்த விமான சந்தைக்கு இது பொருத்தமானதல்ல.
எனவே, உலகளவில் எம்.ஆர்.ஓ., மையங்களின் சந்தையாக இந்தியாவை உருவாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு துறையில் விமானங்களுடன் நின்றுவிடாமல் கப்பல் துறையையும் இணைக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளது.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
பிரான்ஸ் நாட்டின் சப்ரான் நிறுவனம், ஹைதராபாதில் பராமரித்தல், பழுது நீக்கலுக்கான மையம் அமைப்பு
உலகளாவிய பயிற்சி, தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம், இந்திய விமான பராமரிப்பு சூழலுக்கு புதிய திசை காட்டுகிறது
ஹைதராபாத் மையத்தின் வாயிலாக, தென்னிந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

