மாநிலங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் மின் வினியோக நிறுவனங்கள்: ஆர்.பி.ஐ.,
மாநிலங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் மின் வினியோக நிறுவனங்கள்: ஆர்.பி.ஐ.,
ADDED : டிச 21, 2024 10:59 PM

புதுடில்லி:டிஸ்காம் எனப்படும் மின் வினியோக நிறுவனங்கள், தொடர்ந்து மாநில அரசுகளின் நிதியில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருவதாக, ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2022-23ம் நிதியாண்டில், மாநில மின் வினியோக நிறுவனங்களின் ஒட்டுமொத்த இழப்பு, 6.50 லட்சம் கோடியாக உயர்ந்தது. இது நாட்டின் ஜி.டி.பி.,யில் 2.40 சதவீதம் என ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.
பல்வேறு சீர்திருத்த முயற்சிகளுக்குப் பிறகும், மின் வினியோக நிறுவனங்களின் இழப்பு, மாநிலங்களுக்கு பெரும் சவாலாக நீடிப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் உற்பத்தியை அதிகரித்தல், மின்வழித்தட மற்றும் மின் வினியோகத்தில் இழப்பை குறைத்தல், மின் கொள்முதல் விலைக்கு ஈடாக, மின் கட்டணங்களை நிர்ணயித்தல் ஆகியவற்றின் வாயிலாக, மின் வினியோக நிறுவனங்களின் நஷ்டத்தை சரி செய்யலாம் என, ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2022-23ம் நிதியாண்டில், தமிழக மின் வினியோக நிறுவனமான டான்ஜெட்கோ-வின் நஷ்டம் 9,192 கோடி ரூபாய். இது முந்தைய நிதி ஆண்டைவிட, 60 கோடி ரூபாய் அதிகம்.