முழுமையாக செயல்பாட்டுக்கு வராத 'பவர் டெக்ஸ் இந்தியா திட்டம்'
முழுமையாக செயல்பாட்டுக்கு வராத 'பவர் டெக்ஸ் இந்தியா திட்டம்'
ADDED : ஜன 15, 2025 09:06 AM
ஈரோடு; 'பவர் டெக்ஸ் இந்தியா திட்டத்தால்' விசைத்தறிகள் மேம்படாமல் அழிவை சந்திக்கிறது.
இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக, 25 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் பல லட்சம் நெசவாளர்கள், தொழிலாளர்கள், அதை சார்ந்த தொழில் செய்வோர் வாழ்வாதாரம் பெறுகின்றனர்.
கடந்த சில ஆண்டாக தானியங்கி தறிகளால் விசைத்தறி தொழில் முற்றிலும் பாதித்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா போரால் ஏற்றுமதி தடையால் ஜவுளி உற்பத்தி பாதித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து, எம்.எம்.எப்., எனப்படும் செயற்கை இழை பஞ்சு, நுால் இறக்குமதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளதால், உள்நாட்டில் மூலப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளது.
பிற நாடுகளுக்கு ஜவுளியாக ஏற்றுமதி செய்ய இயலவில்லை. மாறாக பிற நாட்டின் துணிகள், ஆயுத்த ஆடைகள் வருகையால் ஜவுளி தொழில் நலிவடைகிறது. இப்பிரச்னைகளை முன்பே அறிந்த மத்திய அரசு, விசைத்தறிகள் மேம்பட, பவர் டெக்ஸ் இந்தியா திட்டத்தை அறிவித்தது.
அதன் மூலம், நெசவாளர்களுக்கு காப்பீடு, சூரிய ஒளி மின் தகடு அமைக்க, 50 சதவீத மானியம், விசைத்தறிகள் மேம்பட, 50 சதவீத மானியம் வழங்க அறிவித்தது.
பின், இத்திட்டத்தை செம்மைப்படுத்தி நடைமுறைப்படுத்துவதாக கூறி கடந்த, 2019ல் தற்காலிகமாக நிறுத்தியது. திட்டத்தை நிறுத்தி ஆறு ஆண்டுகளாகியும் புதிய அறிவிப்பு வராததால், விசைத்தறி உரிமையாளர்கள் கடுமையாக பாதித்துள்ளனர்.
இதுபற்றி, விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலர் வேலுசாமி கூறியதாவது:
விசைத்தறி மேம்பட அறிவிக்கப்பட்ட பவர் டெக்ஸ் இந்தியா திட்டத்தில், நெசவாளர்களுக்கு காப்பீடு, சோலார் பேனல், 50 சதவீத மானியத்தில் வழங்குதல், விசைத்தறி மேம்பட, 50 சதவீத மானியம் உட்பட பல மேம்பாட்டை மத்திய அரசு அறிவித்தது. பின், செம்மைப்படுத்தி நடைமுறைப்படுத்துவோர் எனக்கூறி, 2019ல் நிறுத்தி, மீண்டும் செயல்படுத்தவில்லை.
இந்திய அளவில், காடா துணி உற்பத்தியில், தமிழகம், 2வது இடத்தில் உள்ளது. மதிப்பு கூட்டி பிராசசிங், டையிங், பிரிண்டிங் போன்ற தொழில்களில் மாசு கட்டுப்பாட்டு வாரிய கெடுபிடியால், 80 சதவீத துணிகள் சாயமேற்றவும், மதிப்பு கூட்டிய துணியாக மாற்றவும் வடமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
இதனால் தமிழகத்தின் ஜின்னிங் நிறுவனம் முதல் கார்மென்ட்ஸ் வரை பின்னடைவை சந்திக்கிறது. எனவே, கழிவு நீரை குழாய் மூலம் கடலில் விடும் திட்டத்துக்கு புத்துயிர் வழங்க வேண்டும்.
துணிகளுக்கு சாயமேற்ற தேவையான மூலப்பொருள், வட மாநிலங்களில் இருந்து வருவதால், கூடுதல் செலவாகிறது. தவிர, இங்கு துணியை மேம்படுத்தி வட மாநிலங்களில் விற்க இயலவில்லை.
செயற்கை இழை பாலியஸ்டர் போன்ற நுால்களை தமிழகத்தில் உற்பத்திக்கு வழி செய்ய வேண்டும். இவை அனைத்துக்கும், பவர் டெக்ஸ் இந்தியா திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி விசைத்தறிகளை மேம்படுத்த வேண்டும். உற்பத்தி செலவை குறைக்க, புதிய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்ய வேண்டும். பள்ளி சீருடைகளை முழுமையாக விசைத்தறிகளில் உற்பத்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறினார்.