சிறுதொழில் நிறுவனங்களின் பாக்கி பிரச்னைகளை தீர்க்க இணையதளம் ஜனாதிபதி முர்மு துவக்கி வைத்தார்
சிறுதொழில் நிறுவனங்களின் பாக்கி பிரச்னைகளை தீர்க்க இணையதளம் ஜனாதிபதி முர்மு துவக்கி வைத்தார்
UPDATED : ஜூன் 28, 2025 11:21 AM
ADDED : ஜூன் 28, 2025 01:08 AM

புதுடில்லி:சிறுதொழில் நிறுவனங்களுக்கு வரவேண்டிய தொகை தாமதமாவது தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு அளிப்பதற்கான இணையதளத்தை, ஜனாதிபதி திரவுபதி முர்மு துவக்கி வைத்துள்ளார்.
உலக எம்.எஸ்.எம்.இ., தினத்தை முன்னிட்டு, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இந்த இணையதளம், சிறுதொழில்களின் நிலுவை தாமதமாவது குறித்த தாவாக்களில் விசாரணை மற்றும் முடிவெடுப்பதில் உதவியாக இருக்கும். நிதி, பெருநிறுவனங்களுடன் போட்டி, தாமதமான வரவு ஆகியவை சிறுதொழில்கள் சந்திக்கும் முக்கிய சவால்கள்.
அரசின் ஊக்கத் திட்டங்களை பயன்படுத்தி, இளம்பெண்கள் சிறுதொழில் துவங்கி, சுயசார்பை நிலைநாட்ட வேண்டும். நவீன தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம் நிறைந்த இன்றைய சூழலில், பசுமை தொழில்நுட்பத்தை சிறுதொழில்கள் மேம்படுத்த வேண்டும்.
பசுமை தொழில்நுட்பம் தான், சிறு, குறு, நடுத்தர தொழில்களின் நீடித்த நிலைத்தன்மையையும், போட்டித்தன்மையையும் உறுதிசெய்து, நாட்டின் இலக்குகளை அடையச் செய்யும்.
சிறுதொழில் துறையின் மேம்பாட்டுக்கு, புதுமை கண்டுபிடிப்புகள் மிக அவசியம். புத்தொழில்களையும், புதுமை கண்டுபிடிப்புகளையும் அரசு ஊக்குவித்து வரும் நிலையில், அதை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.
இந்திய ஜி.டி.பி.,யில் எம்.எஸ்.எம்.இ., பங்கு 30%
நாட்டின் ஏற்றுமதியில் எம்.எஸ்.எம்.இ., பங்கு 45%
நாடு முழுதும் எம்.எஸ்.எம்.இ.,க்கள்: 6.30 கோடி
வேலைவாய்ப்பு பெறுபவர்கள்: 34 கோடி
*சிறுதொழில்கள் வழிகாட்டி கவுன்சிலிடம், 50,000 கோடி ரூபாய் நிலுவை குறித்த வழக்குகள் உள்ளன
*நிலுவைத் தொகை தாமதம் குறித்து இணையதள வழியாக சிறுதொழில் நிறுவனங்கள் பதிவு செய்யலாம்
*உத்யம் இணையதள பதிவு எண்ணை குறிப்பிட்டால், நிறுவனம் குறித்த தகவல்கள் புகாரில் தானாக இடம்பெறும்
*விசாரணை தேதி மற்றும் விபரங்கள் தெரிவிக்கப்படம்
* நடுவர் மற்றும் மத்தியஸ்த அலுவலர்கள் தலையீட்டில், ஆன்லைன் தீர்வு அளிக்கப்படும்.