அனுமதியின்றி 'பான்' விபரங்களை பயன்படுத்த மத்திய அரசு கடிவாளம் தனித்தகவல் பாதுகாப்பு சட்டத்துக்கு முன்னோட்டம்
அனுமதியின்றி 'பான்' விபரங்களை பயன்படுத்த மத்திய அரசு கடிவாளம் தனித்தகவல் பாதுகாப்பு சட்டத்துக்கு முன்னோட்டம்
ADDED : நவ 06, 2024 01:36 AM

புதுடில்லி:வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணான, 'பான்' கார்டு விபரங்களை, அங்கீகாரம் இல்லாமல் நிறுவனங்கள் பயன்படுத்த, மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையமான, 'ஐ4சி' இது தொடர்பாக, நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள், நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
பான் கார்டு விபரங்களை, உரிய அனுமதி மற்றும் அங்கீகாரமின்றி பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த, அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பான் கார்டு விபரத்தைக் கொண்டு, தனிநபர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் சில தனித்தகவல்களைப் பெறும் நிறுவனங்கள், அவற்றை வணிக நோக்கில் பகிர்வதுடன், தனிநபரின் கடன் தகுதியை அறியக்கூடிய சிபில் கிரெடிட் ஸ்கோரை அறிந்து, அதற்கேற்ப வாடிக்கையாளரை அணுகுகின்றன.
இது தனித்தகவல் விதிமீறலில் வராவிட்டாலும்; வருமான வரித் துறையின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப சேவையை அங்கீகாரமின்றியும், அனுமதி பெறாமலும் தொடர்பு கொள்வதால், அரசு தற்போது அதைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
மின்னணு தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டம், 2023 விரைவில் அமலுக்கு வரவுள்ள நிலையில், அதன் முன்னோட்டமாக, பான் கார்டு விபரங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக, டில்லியில் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

