350 சி.சி.,க்கு அதிகமான பைக் விலை செப்., 22க்கு பின் ரூ.24,000 வரை உயரும்
350 சி.சி.,க்கு அதிகமான பைக் விலை செப்., 22க்கு பின் ரூ.24,000 வரை உயரும்
ADDED : செப் 06, 2025 12:02 AM

சென்னை:ஜி.எஸ்.டி., மாற்றத்தால், 350 சி.சி.,க்கு மேல் உள்ள பைக்குகளின் விலை, சராசரியாக 9 சதவீதம் வரை உயரும் என கூறப்படுகிறது. அதனால், வரும் 22ம் தேதி வரை, 350 சி.சி.,க்கு மேல் உள்ள பைக்குகளை வாங்க வாடிக்கையாளர் கூட்டம் அலை மோதும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம், 350 சி.சி.,க்கு மேல் உள்ள பைக்குகளை அதிகம் விற்பனை செய்யும் நிறுவனமாகும். இந்நிறுவனம், கடந்த ஆகஸ்ட்டில், 1.03 லட்சம் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இதில், 13.5 சதவீத பைக்குகள், 350 சி.சி.,க்கு மேல் உள்ள பைக்குகள் ஆகும். பெரும்பாலான விற்பனை பங்கு 350 சி.சி.,க்கு உட்பட்டு இருப்பதால், இந்நிறுவனத்திற்கு சிறிதளவில் பாதிப்பு ஏற்படும்.
இந்த ஜி.எஸ்.டி.,யால், அதிகம் பாதிப்படையும் நிறுவனமாக பஜாஜ் மாறி உள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில், 49 சதவீதம் 350 சி.சி.,க்கு மேல் உள்ள பைக்குகள் ஆகும். கே.டி.எம்., ட்ரையம்ப் உள்ளிட்ட நிறுவனங்களும் இதில் அடங்கும். ஹீரோ, டி.வி.எஸ்., உள்ளிட்ட நிறுவனங்களில் 350 சி.சி.,க்கு மேல் எந்த பைக்குகளும் இல்லை. இந்த பிரிவில், ஹோண்டா, சுசூகி நிறுவனங்களின் விற்பனை குறைவாக இருப்பதால், பாதிப்பு மிகக் குறைவு.
புதிய ஜி.எஸ்.டி.,யால், 350 சி.சி.,க்கு மேல் உள்ள பைக்குகளின் விலை, குறைந்தபட்சம், 13,000 ரூபாய் முதல் 24,000 ரூபாய் வரை உயர அதிக வாய்ப்பு உள்ளது. வரும் 22ம் தேதிக்கு பின், இந்த வகை பைக்குகளின் விற்பனை நாளுக்கு நாள் குறையும் என கூறப்படுகிறது.