'ஏற்றுமதி ஊக்குவிப்பால் போட்டித்திறன் மேம்படும்' பிரதமர் மோடி நம்பிக்கை
'ஏற்றுமதி ஊக்குவிப்பால் போட்டித்திறன் மேம்படும்' பிரதமர் மோடி நம்பிக்கை
ADDED : நவ 13, 2025 11:45 PM

புதுடில்லி: மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முக்கிய முடிவுகள், நாட்டின் ஏற்றுமதி போட்டி திறனை மேம்படுத்தும் என, பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டில்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 25,060 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்துக்கும்; 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உத்தரவாத திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பிரதமர் மோடி தன் சமூக வலைதள பதிவில் தெரிவித்து உள்ளதாவது:
சர்வதேச சந்தையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான மதிப்பை அதிகரிக்கும் விதமாக, ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது, நாட்டின் ஏற்றுமதி போட்டி, திறனை மேம்படுத்துவதோடு, எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள், முதல் முறை ஏற்றுமதியாளர்கள் மற்றும் அதிக பணியாளர்களை கொண்ட துறைகளுக்கு உதவியாக இருக்கும்.
ஏற்றுமதி சம்பந்தப்பட்ட முக்கிய பங்குதாரர்களை ஒருங்கிணைத்து, தீர்வுகளை நோக்கிய திறன் வாய்ந்த கட்டமைப்பை உருவாக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாத திட்டமானது, சுமுகமான வணிக செயல்பாடுகளை உறுதிப்படுத்துவதோடு, தற்சார்பு இந்தியா இலக்கை அடைய உதவியாக இருக்கும்.
மேலும், கிராபைட், சீசியம், ருபீடியம் மற்றும் சிர்கோனியம் ஆகிய நான்கு முக்கிய கனிமங்களின் ராயல்டி விகிதங்களை குறைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், உள்நாட்டு வினியோக தொடர் வலுப்பெறுவதோடு, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
கடன் உத்தரவாதத் திட்டத்தின்: கீழ்: வட்டி விகிதத்தில் சலுகை: வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது:

