ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு பிரதமர் அலுவலகம் ஒப்புதல்
ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு பிரதமர் அலுவலகம் ஒப்புதல்
ADDED : ஜூலை 16, 2025 11:27 PM

புதுடில்லி:ஜி.எஸ்.டி., கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கு, பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி., நடைமுறை, முதல் முறையாக குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் செய்யப்பட உள்ளது.
தற்போதைய ஜி.எஸ்.டி., நடைமுறையில் ஐந்து வரி அடுக்குகள் உள்ளன. இந்நிலையில், இவ்வளவு வரி அடுக்குகள் தேவையற்றது என்றும், பின்பற்ற ஏதுவாக வரி விகிதங்களையும், நடைமுறையையும் எளிதாக்க வேண்டும் என்றும், தொழில்துறையினர் சார்பில் நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆய்வு செய்ய கவுன்சிலின் சார்பில் அமைச்சர் குழு நியமிக்கப்பட்ட நிலையில், இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், ஜி.எஸ்.டி., கட்டமைப்பை மறுசீரமைக்க பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஜி.எஸ்.டி., நடைமுறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் மாநிலங்களுடன் விவாதிக்கப்படும் என்றும்; ஏற்கனவே அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனை துவங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒரு முக்கிய யோசனை என்னவாக உள்ளதென்றால், 12 சதவீத வரி விதிப்பை முற்றிலும் அகற்றி, அவற்றில் உள்ள பொருட்களை 5 மற்றும் 18 சதவீத வரி விதிப்பின் கீழ் கொண்டு வரலாம் என்பதே.