தனியார் துறை மூலதன செலவினம் கடந்த 3 மாதங்களில் 42% அதிகரிப்பு
தனியார் துறை மூலதன செலவினம் கடந்த 3 மாதங்களில் 42% அதிகரிப்பு
ADDED : அக் 03, 2024 02:50 AM

புதுடில்லி,:கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில், தனியார் துறையின் மூலதன செலவின அறிவிப்புகள் 42 சதவீதம் அதிகரித்து, 4.09 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையமான சி.எம்.ஐ.இ., தெரிவித்து உள்ளது.
மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்தாண்டு செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு செப்டம்பர் காலாண்டில் தனியார் துறையின் மூலதன செலவின அறிவிப்புகள் 42 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில், சாலை, ரயில்வே, உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான அரசின் மூலதன செலவின அறிவிப்புகள் கிட்டத்தட்ட 1.40 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இதையடுத்து, செப்டம் பர் காலாண்டில் அரசு மற்றும் தனியாரின் ஒட்டு மொத்த மூலதன செலவின அறிவிப்புகள் 5.49 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஜூன் காலாண்டில், தேர்தல் காரணமாக மூலதன செலவினம், இதில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்தது.
செப்டம்பர் காலாண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில், 3.39 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தயாரிப்பு துறையை சார்ந்தது. இந்த காலத்தில், சேவைகள், கட்டுமானம், ரியல் எஸ்டேட் துறைகளுக்கான செலவினம் அதிகரித்தும்; மின்சார துறைக்கான செலவினம் குறைந்தும் உள்ளது.
இதற்கிடையே, செப்டம் பர் காலாண்டில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் மதிப்பு 80,000 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. இது கடந்தாண்டு இதே காலத்தில் 1.90 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.